தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் (24.07.2025) முடிவடைந்தது. முன்னதாக இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisment

இதனையடுத்து திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதேபோல் அதிமுக கூட்டணியில் இன்பதுரை, தனபால் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த  6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இன்று (25.07.2025) நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Advertisment

இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்  4 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் 4 பேரும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற கமல்ஹாசனை வாழ்த்தி அவரது கட்சியினர் “கமல்ஹாசன் எனும் நான்”என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம் அதிமுக உறுப்பினர்களான இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இருவரும் வரும் திங்கட்கிழமை (28.07.2025) பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.