நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதில் திமுக எம்.பி.க்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேற்கு வங்கம் காரக்பூர் ஐஐடியில் கடந்த ஏழு மாதங்களில் நான்கு மாணவர்கள் இறந்துள்ளதற்கு வருத்தம் தெரிவித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் உயர் கல்வி வளாகங்களில் தொடர்ந்து சாதிய வன்முறையால் மாணவர்கள் இறப்பது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.அதில், "உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மத்திய பல்கலைகழகங்களில் அமைக்கப்படும் சம வாய்ப்பு பிரிவுகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள், 2012இன் படி அமைக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பிரிவுகளின் எண்ணிக்கை விவரங்கள் என்ன? அவை இன்னும் முழுமையாக அமைக்கபடாததற்கான காரணங்கள் என்ன?கல்லூரி/பல்கலைக்கழக வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?.
கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடந்த இத்தகைய சம்பவங்களின் விவரங்கள், கல்லூரி வாரியாக/பல்கலைக்கழக வாரியாக வெளியிட வேண்டும். பாகுபாட்டை எதிர்கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அல்லது அரசு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளின் விவரங்கள் என்ன? சாதி அடிப்படையிலான பாகுபாட்டால் எழும் குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் வகுத்துள்ள கூடுதல் வழிமுறைகள் என்ன?. பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரி கல்லூரிகள், திமுக எம்.பி. டி. மலையரசன் கோரிக்கை. கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் 374 மாதிரி கல்லூரிகளை உருவாக்குவதாக ஒன்றிய அரசு முன்மொழிந்திருந்ததை சுட்டிக்காட்டி அதன் தற்போதைய நிலை என்ன என்று கள்ளக்குறிச்சி திமுக மக்களவை உறுப்பினர் டி. மலையரசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களை கண்டறியும் வரையறைகள் என்ன? இதுவரை தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள அத்தகைய மாவட்டங்கள் எத்தனை? இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு? கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட தேவைப்படும் கால அவகாசம் என்ன? இக்கல்லூரிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? போன்ற பல்வேறு விவரங்களையும் அவர் கோரியுள்ளார்.
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, நாடாளுமன்றத்தில் கோரிக்கை! திமுக எம்.பி. சி. என். அண்ணாதுரை, திமுக எம்.பி. ஜி. செல்வம் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்கள் எத்தனை, அதில் அளிக்கப்படும் பயிற்சி விவரங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை மற்றும் ஜி. செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் மையங்கள் எந்தெந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன?. தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளாக இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி விவரங்கள், பயிற்சி பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்கள் என்ன? தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், வணிக சங்கங்கள் அல்லது தனியார் துறை முதலாளிகளுடன் இப்பயிற்சிக்காக அரசு செய்துள்ள ஒப்பந்தங்களின் விவரங்கள் என்ன?. மற்றும் தமிழ்நாட்டில் PMKVY பயனாளிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? போன்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஐடிஐகளின் செயல்பாடுகள் திமுக எம்.பி. அ. மணி கேள்வி தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் பயிற்சி மையங்களின் (ஐடிஐ) விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தருமபுரி மக்களவை உறுப்பினர் அ. மணி கேள்வி எழுப்பியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் தொழில் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள், அதில் வழங்கப்படும் படிப்புகள் மற்றும் சேர்க்கை விவரங்கள் என்ன? ஐடிஐகளில் கிடைக்கும் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பின் தரத்தை அரசாங்கம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? புதிதாக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசாங்கம் நிறுவ முன்மொழிந்துள்ள ஐடிஐகளின் விவரங்கள் என்ன? பயிற்சி தரங்களை மேம்படுத்த, வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார். தங்க நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்க திமுக எம். பி. தங்க தமிழ்செல்வன் திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார். தங்க நகைகள் மீது வங்கிகள் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வரைவு வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி திமுக மக்களவை உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
தங்கப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் 2025 ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும், 2 லட்சம் வரையிலான விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக ஏற்றுக்கொள்வதை தொடர வேண்டும். மேலும் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறும் RBI-க்கு அறிவுறுத்தச் சொல்லி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் எழுதிய கடித்தத்திற்கு ஒன்றிய அரசின் பதில் என்ன? என்று அவர்கள் கேட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக கேலோ இந்தியா மையங்கள் திமுக எம்.பி. டி எம் கதிர் ஆனந்த் கோரிக்கை தமிழ்நாடு முழுவதும் மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதியில் கேலோ இந்தியா மையங்களை (கேஐசி) திறக்க அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் குறித்து வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர், கடந்த ஐந்து ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டிலும் இந்த மையங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன என்றும் மேலும் இத்திட்டத்தின் நோக்கத்தை மேம்படுத்த ஒன்றிய அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் என்ன என்றும் கேட்டுள்ளார்.
அகமதாபாத்தில் விமான விபத்துக்கான காரணங்கள் என்ன?. திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி, ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான துயர் மிகுந்த சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கேட்டுள்ளதாவது : இந்த விபத்தில் இறந்தவர்கள்/காயமடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன? பயணிகள் தவிர மற்றவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு எவ்வளவு?. இதுவரை ஒன்றிய அரசு ஏதேனும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?. இந்த விபத்திற்கு காரணமாக யாரேனும் தனி நபர் அல்லது ஏதேனும் நிறுவனம் செய்த நாசவேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதா? இந்த விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நிகழாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளதையொட்டி, இன்று டெல்லியில் உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.