கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 6 கோடியே 39 லட்சம் மதிப்பில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த எல். இளையபெருமாளுக்கு நினைவு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 14ஆம் தேதி இரவு ரயில் மூலம் சிதம்பரத்திற்கு வருகிறார். இதனை தொடர்ந்து 15ஆம் தேதி காலை காமராஜர் பிறந்தநாளில்  சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

இதனையடுத்து தமிழகத்தில் கடை கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தினை அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் நகர்புற பகுதிகளில் 3768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6232 முகாம்களும், கடலூர் மாவட்டத்தில் நகர்புற பகுதியில் 130 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் நடைபெறுகிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளில் முகமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். 

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் புறவழி சாலையில் அமைக்கப்பட்டுள்ள  சமூக நீதிக்காக போராடிய எல். இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் திமுக அரசின் சாதனைகள் குறித்த பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று (06.07.2025 - ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினார். இவருடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகும், பொறுப்பேற்பதற்கு முன்பும் மக்களுடன் இணைந்தே இருந்தார். அதனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் எழுச்சி ஏற்படுகிறது. அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல லட்சம் மனுக்களை பெற்று பின்னர் ஆட்சிக்கு வந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். தனி நபர்கள் பயன்பெறும் திட்டங்கள் இந்த ஆட்சியில் உள்ளது. இதுதான் முதல்வரின் சாதனை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு பல்வேறு நிதிகளை தமிழகத்திற்கு தர மறுத்துள்ள நிலையில்  திமுக அரசு பல்வேறு மக்கள் திட்டங்களை செயல்படுத்தி சாதனைகளை செய்து வருகிறது.

Advertisment

அதேபோல் கடலூர் மாவட்டத்திற்கு தோல் இல்லாமல் காலணி மற்றும் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் கடலூர் துறைமுகம் விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமும் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். நடிகர் விஜய் தமிழக களத்தை சினிமா என நினைத்து ஒரு நாள் முதல்வர் போல்  பேசி வருகிறார். இது மக்களிடத்தில் எடுபடாது. அதிமுக கூட்டணி கட்சி  தலைவர் ஒருவர் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என கூறியுள்ளார் அதுதான் பொதுமக்களின் எண்ணம், உண்மையான கருத்து, மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் மூலம் சந்தித்து வருகிறோம். அதில் திமுக அரசின் திட்டங்கள் இல்லாத ஒரு வீடுகளும் இல்லை. பொதுமக்கள் திமுக அரசை வரவேற்கிறார்கள். தேர்தல் நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்கள்” என்றார்.