தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அல்லது 2வது வாரத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 6 ஆறு பேர் கொண்ட குழுவினர் மாநாடு நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணியைத் தீவிரப்படுத்தி இருந்தனர். இதன் ஒரு பகுதியாகக் கடந்த ஒரு வாரக் காலமாக மதுரையில் மாநாடு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஈடுபட்டிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் 2வது மாநாடு மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள இளையார் சுங்கச்சாவடி அருகே உள்ள கூட கோவில் என்னும் இடத்தில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி நாளை (16.07.2025) ஆனந்த் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் மாநாட்டை நடத்துவதற்கான தேதியும் நாளை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அக்கட்சியினர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாளை அனுமதி பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 4ஆம் தேதி அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் அல்லது 2வது வாரத்தில் கட்சியின் 2வது மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.