அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் இன்று (14.07.2025) கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களிடம் உரையாற்றினார். குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி சாலை வடலூர் நான்கு முனை சந்திப்பில் மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது, ‘’2026 தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைக்கப்படும். முதல்வர் மு.க. ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். குறிஞ்சிப்பாடியில் தான் ஒரு அமைச்சர் இருக்கிறார். அதுவும் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கிறார். இங்கு வந்திருப்பவர்கள், விவசாயிகளுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?. வேளாண் பட்ஜெட் போட்டு ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றுகிறார்கள்.
20 துறைகளை ஒன்றாகச் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று ஏமாற்றுகின்றனர். ஆயிரம் கோடிகள் கொடுக்கப்பட்டதாகப் பொய்யான தோற்றம் காட்டுகிறார்கள். நான்காண்டுகள் பட்ஜெட்டில் என்ன திட்டம் நிறைவேற்றினீர்கள்? விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்று சொல்லிவிட்டு 50 நாளாகக் குறைத்துவிட்டனர். அதுமட்டுமின்றி சம்பளத்தையும் குறைத்துவிட்டனர். அதிமுக ஆட்சியில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுத்தோம் அதை நிறுத்திவிட்டனர். ரேஷன் கடைகளில் இரண்டு கிலோ சர்க்கரை கொடுப்பேன் என்று சொன்னார்கள், செய்யவில்லை.
கேஸ் மானியம் ரூ.100 கொடுப்பேன் என்று சொன்னார்கள் செய்யவில்லை. ஏமாற்றினார்கள். கவர்ச்சிகரமாகப் பேசி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. எப்போது பார்த்தாலும் மாதம் ரூ.1000 கொடுத்தோம் என்றே சொல்கிறார். நாங்கள் போராடியதால்தான் இந்த ஆயிரம் ரூபாய் வந்தது. இன்னும் 8 மாதம்தான் இருக்கிறது மேலும் 30 லட்சம் பேருக்குக் கொடுக்கிறாராம். தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காகவே இதைச் சொல்லி இருக்கிறார். குழப்பத்தை விளைவித்து வாக்குகளைப் பெறும் ஒரே கட்சி திமுக.
உங்களுடன் ஸ்டாலின் என்று நோட்டீஸை தூக்கிக்கொண்டு வருகிறார். இத்தனை ஆண்டுகள் யாருடன் இருந்தீர்கள். அவருடைய மருமகன் தான் இதற்கு இன்சார்ஜ். அவர்தான், ‘மாமா நான் விளம்பரம் அடிச்சு தரேன், நீங்க வீடு வீடா சென்று கொடுங்கள்’ என்று அனுப்பியிருக்கிறார். ஏராளமான திட்டங்களை அதில் குறிப்பிட்டுள்ளனர். திமுகவினர் விஞ்ஞான ஊழல்வாதிகள். அதனால் நோட்டீஸ் எடுத்துக் கொண்டு வீடு வீடாக வருவார்கள். நீங்க எல்லாம் உஷாராக இருங்கள். வீடு வீடாக வரப்போகிறார்கள். அப்படியெனில் நான்காண்டுகளாக மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டார். இன்னும் 8 மாதத்தில் என்ன செய்துவிட முடியும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.