“அற்ப அரசியலை செய்வது தி.மு.க. தானே?” - இ.பி.எஸ். கேள்வி!

eps

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா கலந்து கொண்டார். அப்போது அவர்  காமராஜர் குறித்தும் பேசுகையில், “எனக்கு 23, 24வது வயது இருக்கும் கலைஞர் என்னை காரில் அழைத்துக்கொண்டு செல்வார். அப்போது ஏதாவது நிகழ்வு பற்றி என்னிடம் சொல்லுவார். இதற்கு சில பேர் சொல்வார்கள், ‘என்ன சின்ன பையன் கிட்ட சொல்லிட்டு இருக்கிறார்’ என்று. ஆனால் அவருக்கு (கலைஞருக்கு) தெரியும் இதைப் பற்றி நான் கூட்டத்தில் பேசுவேன். மக்களிடம் சரியாகக் கொண்டு  சேர்ப்பேன் என்று. அது மாதிரி நிறைய எனக்குச் சொல்லுவார்.

அதில் ஒரு நாள், ‘காமராஜர் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுக்க கண்டனம் கூட்டம் போடுறாரு. காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற எல்லா பயனியர் விடுதிகளிலும் குளிர் சாதன வசதி செய்யச் சொல்லி உத்தரவிட்டேன். நம்மை எதிர்த்துத்தான் பேசுறாரு. ஆனால் அவருடைய உடல்நலன் கருதி நான் எல்லா பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொன்னேன்’ எனக் கூறினார். அதன் பின்னர் இவ்வளவு பெரிய உள்ளமா அவருக்கு என்று கடைசியாகக் கையை பிடித்துக்கொண்டு உயிர் போறதுக்கு முன்னாடி நீங்க:ள்தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றவேண்டும் என்று கூறினார்’” எனப் பேசியிருந்தார். திருச்சி சிவாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது குறித்து திருச்சி சிவா விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கலைஞரின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்?. திமுகவின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? பெருந்தலைவர் காமராஜர் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலினும், திமுகவும் பேசுவதெல்லாம் நகைமுரண். பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்?. உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே?. 

அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுகவினர் தானே?. காமராஜர் குறித்த கலைஞரின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கலைஞர் வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே? இவரே வெடிகுண்டு வைப்பாராம் இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே. அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன் உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது. வாழ்க கர்மவீரரின் புகழ்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

dmk admk congress Edappadi K Palaniswamy kalaignar kamarajar mk stalin trichy siva
இதையும் படியுங்கள்
Subscribe