ஆங்கில நாளிதழ் ஒன்றில் திமுக அரசின் நிர்வாகம் குறித்து கட்டுரை எழுதியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அதில்,“தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக தென்னிந்தியாவின் தொழில்துறை இதயமாக போற்றப்பட்டு வந்துள்ளது. ஆட்டோமொபைல், மின்னணு பொருட்களின் உற்பத்தி முதல், தொழில்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி வரை புதுமை, பொருளாதார உற்பத்தி திறன் ஆகியவற்றின் அடையாளமாக தமிழகம் இருந்து வருகிறது. இந்த புகழையும், பெயரையும் நிலைநிறுத்துவதற்கு தொலைநோக்குப் பார்வை, சிறந்த நிர்வாகம், எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார மீள்தன்மை தேவைப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை முன்பு வழிநடத்தியவன் என்ற வகையில், தற்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் அதன் முன்னேற்றம் பாதிக்கப்படுவது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது அரசு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலோட்டமாக பார்க்கும்போது இது மிகப்பெரிய எண்ணிக்கையாக தோன்றலாம். ஆனால் ஆழமாக ஆராய்ந்தால், இதில் பெரிய அளவில் உண்மை இல்லை என்பது புரிந்துவிடும். தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை (DPIIT) மற்றும் ரிசர்வ வங்கியின் 2024 – 24-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டின் தரவுகளின்படி, ஸ்டாலின் அறிவித்ததில் கால் பங்குக்கும் சற்று அதிகமான முதலீடுகள் மட்டுமே தமிழக அரசால் பெறப்பட்டுள்ளன. மற்ற முதலீடுகள் அனைத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே இருக்கின்றன. உண்மையான முதலீட்டுக்கும், முதலீடு செய்வதற்கான அறிவிப்புக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
அறிவிப்பில் மட்டுமே இருக்கும் தொழில்துறை கட்டமைப்புகள்
கடந்த 4 ஆண்டுகளில் தொழில்துறை என்பது கட்டமைக்கப்பட்ட பிம்பமாக மட்டுமே இருக்கிறது. மாநிலத்தின் பெருளாதார நிலையை மாற்றக்கூடிய பல திட்டங்கள் இன்னும் வெறும் திட்டங்களாக மட்டுமே உள்ளன. அவை உரிய காலத்தில் நிறைவேற்றப்படவில்லை. இதை விளக்கமாக கூறுகிறேன்
- சென்னை – கன்னியாகுமரி காரிடார் (தொழில் தட சாலை) கிழக்கு கடற்கரை பகுதியின் பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்துவதற்காக 590 கிலோமீட்டர் நீளத்தில் அமையும் இந்த காரிடார், துறைமுகங்களுக்கு இடையிலான இணைப்பு மற்றும் தொழில்துறை விரிவாக்கத்தால் 23 மாவட்டங்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து 3,500 கோடி ரூபாயை கடனாக பெற்ற பிறகும் இத்திட்டம் மந்தமான முறையிலேயே முன்னேறி வருகிறது. இபிசி 15 மற்றும் இபிசி -07 ஆகிய டெண்டர்கள் கடந்த 2020-ம் ஆண்டில் விடப்பட்டும் இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளன. 2025-ம் ஆண்டின் நடுப்பகுதி வரை இத்தடத்தின் 10 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இந்த திட்டம் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தால், தென் மாநில மக்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளித்திருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த திட்டம் இன்னும் காகித அளவில் மட்டுமே உள்ளது.
2. சென்னை – பெங்களூரு காரிடார் (CBIC)
தமிழகத்தின் வட மாவட்டங்களை இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவுடன் இணைக்கும் நோக்கத்துடன் இந்த தொழில் தட சாலைக்கு திட்டமிடப்பட்டது. இதற்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்ட பிறகும் உள்கட்டமைப்பு பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இத்திட்டத்துக்கான முதலீடும் இன்னும் வந்து சேரவில்லை. இத்திட்டம் முற்றிலும் செயலற்ற தன்மைக்கு செல்லவில்லை என்றாலும் அது செயல்படுவதற்கு இன்னும் பலகாலம் ஆகலாம் என்ற நிலையில்தான் உள்ளது.
3.கோவை - சேலம் – சென்னை ஹைடெக் காரிடார்
குஜராத்தின் தோலேரா மற்றும் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் காரிடருக்கு ஈடாக தமிழகத்தில் இந்த ஹைடெக் காரிடார் இருக்கும் என்று கூறப்பட்டது. மின்னணு பொருட்கள், ராணுவ தளவாடங்கள், ஜவுளி என அடுத்த தலைமுறை உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய நுழைவு வாயிலாக இந்த காரிடார் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இன்று கிருஷ்ணகிரி சிப்காட் உள்ளிட்ட தொழில் பூங்காக்கள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த மண்டலம் பல வாய்ப்புகளை இழந்து நிற்கிறது.
4. தமிழக பாதுகாப்பு தொழில் காரிடார் (TNDIC)
சென்னை, ஒசூர், கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய ஐந்து முக்கிய மையங்களுடன், தமிழ்நாட்டை பாதுகாப்பு உற்பத்தியின் மையமாக மாற்றும் நோக்கில் தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை காரிடார் (TNDIC) தொடங்கப்பட்டது. இதற்காக 11,794 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை 3,861 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டுள்ளது. உறுதியாக செயல்படுத்த முடியாததால் தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை காரிடார் (TNDIC) என்பது நிறைவேற்ற முடியாத வாக்குறுதியாக தொடர்கிறது.
இதனால் ஏற்படும் விளைவு, வெறும் பொருளாதார வீழ்ச்சியை மட்டும் அளிக்கவில்லை. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு கிடைத்திருக்க வெண்டிய வேலை பறிக்கப்படுகிறது. இந்த பிராந்தியங்கள் பின்னடைவை சந்திக்கின்றன.
தொடரும் வேலைவாய்ப்பின்மை : ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த தட சாலைகளுக்கான பணியை முடித்திருந்தால் 4 லட்சம் முதல் 5 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாக வேலை கிடைத்திருக்கும்.
சோர்வடையும் முதலீட்டாளர்கள் : தமிழகத்தை விட மற்ற மாநிலங்கள் தொழில் தொடங்க விரைவில் அனுமதி வழங்குவதாலும், சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதாலும், வெளிப்படையாக முடிவை அறிவிப்பதாலும் முதலீட்டாளர்கள் நம் மாநிலத்தை விட்டு அங்கு செல்கின்றனர்.
அதிகரிக்கும் மண்டல ஏற்றத்தாழ்வு : நமது மாநிலத்தின் மனித மேம்பாட்டு குறியீடு பட்டியல், நமக்கு ஒரு விஷயத்தை தெளிவாக்குகிறது. இந்த பட்டியலில் சென்னை 0.841 புள்ளிகளுடன் இருக்கிறது. ஆனால் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் 0.699 புள்ளிகளுடன் இருக்கின்றன. தொழில்துறை காரிடார்களை திட்டமிட்டபடி அமைத்திருந்தால் இந்த ஏற்றத்தாழ்வை அதிகரிப்பதை தவிர்த்து அதைக் குறைத்திருக்கலாம்.
2024-25-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் நிகர உற்பத்தி 17.23 லட்சம் கோடியாக உள்ளது. இதில் தொழில்துறை ஏறத்தாழ 35 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. இருந்தாலும் தொழில்துறையின் அடித்தளமாக விளங்கும் போக்குவரத்து, சரக்கு பெட்டகம், போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகள் குறைவாகவே செயலாற்றுகின்றன. கோவையில் அமையவேண்டிய மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா, குறித்த நேரத்தில் முடிக்கப்படவில்லை. 2023-ல் வாக்குறுதி அளிக்கப்பட்ட கிடங்கு கொள்கை இந்த 2025-ம் ஆண்டிலும் அனுமதிக்காக காத்திருக்கிறது.
முதலில் செயல்படுங்கள்; பிறகு தற்புகழ்ச்சி செய்யுங்கள்
அறிவிப்புகளை வெளியிடும் கலையில் இந்த அரசு தேர்ந்ததாக இருக்கிறது. ஒவ்வொரு ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சி மூலமும், தற்புகழ்ச்சிக்கான வீடியோக்கள் மூலமும் தமிழகம் வளர்ந்துவிட்டதாக ஒரு மாயையை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அதைத் தாண்டி பார்க்கும்போது உண்மை வெளிப்படும். காரிடார் அமைக்கும் திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. டெண்டர்களுக்கான அனுமதிகள் அதிகாரிகளின் பைல்களில் திணறிக்கொண்டு இருக்கின்றன. தெளிவான பதில்கள் கிடைக்காததால் முதலீட்டாளர்கள் நம்மை விட்டுச் செல்கின்றனர்.
இதற்கு நேர்மாறாக எங்களின் ஆட்சிக்காலத்தில் வெற்றிகரமான 2 உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடுகளை 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடத்த்தினோம். இதன் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க நிலங்களை ஒதுக்கி கொடுப்பது, அனுமதிகளை உடனடியாக வழங்குவது போன்றவற்றை செய்து அவர்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினோம்.
இந்த பாதையை மாற்றிக்கொள்ள இன்னும் காலம் இருக்கிறது. ஆனால் அதற்கு அரசியல் விருப்பமும், நிர்வாக ஒழுங்கும் வேண்டும். தமிழகத்தில் தொழில்துறையை புதுப்பிக்க அதிமுக மும்முனை அணுகுமுறையை முன்மொழிகிறது.
1.காரிடார்களை குறித்த காலகெடுவுக்குள் முடிப்பது:
ஒவ்வொரு காரிடாரையும் முதல்வர் தலைமையிலான பணிக்குழு நிர்வகிக்க வேண்டும். அப்பணிகளை முடிக்க ஒவ்வொரு காலாண்டிலும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். நாங்கள் முன்மொழியும் சில விஷயங்கள்..
சென்னை – கன்னியாகுமரி இண்டஸ்டிரியல் காரிடார் (CKIC) : அடுத்த சில மாதங்களில் டெண்டரை இறுதி செய்வதற்கும், திட்டத்தை வடிவமைப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2026-ம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்குள் திட்டப் பணிகளை தொடங்க இலக்கு வைத்துக்கொள்ள வேண்டும். 2027-ம் ஆண்டின் மத்திக்குள் 100 கிலோமீட்டர் சாலைப்பணிகளை முடிக்க திட்டமிட வேண்டும். இத்திட்டத்தை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
சென்னை பெங்களூரு இண்டஸ்டிரியல் காரிடார் (CBIC): பொன்னேரி முனையத்தை செயல்படுத்துவதில் வேகம் காட்ட வேண்டும். 2027-ம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும். அதேபோல் சேலத்தில் உள்ள ஒருங்கிணைந்த உற்பத்தி மையங்களை 2027-ம் ஆண்டு 2-வது காலாண்டுக்குள் மேம்படுத்த வேண்டும்.
2. பரவலாக்கப்பட்ட தொழில் மேம்பாடு :
இப்போது சென்னையை மையமாக கொண்டு தொழில் மேம்பாட்டு மாடலை பின்பற்றி வருகிறோம். அதை மாற்றி பரவலாக்கப்பட்ட தொழில் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 25 மாவட்ட அளவிலான சிறு மற்றும் குறு தொழில் மையங்களை அமைக்கவேண்டும். அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதில் கவனம் செலுத்தவேண்டிய முக்கிய இடங்கள்:
மதுரை மற்றும் சிவகங்கையில் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனங்கள்
சேலம் மற்றும் ஓசூரில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி
காவேரி டெல்டா பகுதிகள்; மற்றும் தென் மாவட்டங்களில் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் சார்ந்த நிறுவன்ங்கள்
3. ஆட்சியில் சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான கருவிகள்
டிஜிட்டல் மற்றும் ஒற்ரைச் சாளர முரையில் ஒப்புதல் அளிக்கும் முறையை கொண்டுவர வேண்டும். குறித்த நேரத்தில் பணிகள் முடிகிறதா என்று கண்காணிக்க வேண்டும்
தொழில் நிறுவனங்களை அமைக்க இடம் தேர்ந்தெடுக்க வசதியாக தமிழகத்தில் எங்கெல்லாம் காலி இடங்கள் இருக்கின்றன என்பது பற்றிய பதிவேட்டை வெளியிட வேண்டும்.
திட்டத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய ரெரா (RERA) மாதிரியில் கண்கானிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு இதைவிட தகுதிவாய்ந்தது
தொழில்துறை வளர்ச்சி என்பது வேடிக்கை நாடகம் அல்ல. அது பொருளாதார சமத்துவம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் மாவட்டம்தோறும் செழிப்பைப் பெறுவதற்கான ஒரு அர்ப்பணிப்பு ஆகும். புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாண்டி திமுகவால் முன்னேற முடியாமல் போனது நமது தொழில்துறை இஞ்ஜினை பாதித்துள்ளது. நமது தொழில்முனைவோர்கள் காத்திருக்கிறார்கள். நமது இளைஞர்கள் வேலைக்காக வேறு இடங்களுக்கு செல்கிறார்கள். நமது முதலீட்டாளர்கள் வேறு இடங்களைப் பார்க்கிறார்கள்.இதை மாற்றுவதில் அதிமுக உறுதியாக உள்ளது. இந்தியாவின் தொழில் வளர்ச்சியை தமிழ்நாட்டால் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மேடைகளில் நடக்கும் நிகழ்ச்சிகளால் அல்ல, உண்மையாக உழைப்பதால். அரசியல் வேடிக்கை பேச்சுகளால் அல்ல, செயல்திறனால். காகிதத்தில் இருந்து காரிடாருக்கும், நிஜமான தொழில் நிறுவனங்களுக்கும், வாக்குறுதிகளை விட்டு உண்மையான பலன்களை நோக்கி முன்னேற வேண்டிய நேரம் இது” என்று பதிவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.