அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் இன்று (15.07.2025) உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டோம். சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பாகத் தேர்தல் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். நீங்கள் வேண்டுமென்றால் படித்துப் பாருங்கள். அப்போது தெளிவாக நாங்கள் சொன்னோம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைக்கு 1500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம். ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலினும், அவருடைய சாகக்களும் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தியைக் கவர்ச்சிகரமாகப் பேசி வாக்குகளைப் பெற்று கொள்ளைப் புறத்தின் வழியாக ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள். 

ஆட்சிக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை. 10 சதவீத வாக்குறுதிகள் தான்  நிறைவேற்றிருக்கிறார்கள். இது கிராமம் நிறைந்த பகுதி. விவசாய நிறைந்த பகுதி. விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இந்த பகுதியில் இன்றைக்கு ஏழை மக்கள் நிறைந்த பகுதி ஆகும். 100 நாள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று சொன்னார். அதன்படி உயர்ந்ததா?. 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி புரிகின்ற ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்த்துவதாகச் சொன்னார்கள்.  அவ்வாறு  உயர்த்தினார்களா?.  100 நாள் வேலைத் திட்டத்தின் நாட்கள் குறைந்து  50 நாட்கள் ஆகிவிட்டது. இப்போது  50 நாளுக்குத்தான் வேலை கொடுக்கிறார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் எப்படி ஏழை மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் அதுமட்டுமில்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி பெறுகின்ற ஊழியர்களுக்கு அவருக்கு உண்டான சம்பளத்தைக் கொடுக்கவில்லை பல மாதம் சம்பளம் நின்று போனது. உடனே மத்திய அரசு மீது பழி போட்டார். நாங்கள் மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேசிய போது மத்திய அமைச்சர் சொன்னார், ‘எனக்கு இன்னும் கணக்கே கொடுக்கலைங்க. எல்லாம் பொய் கணக்கு எழுதி இருக்கிறார்கள். ஊழல் செய்திருக்கிறார்கள். கணக்கு கொடுத்தால் தான் நாங்கள் பணம் கொடுக்க முடியும்’ என்று சொன்னார். 

அதற்கு நாங்கள் சொன்னோம், ‘அவர்கள் எவ்வளவு கேட்கிறார்களோ அதில் ஒரு பகுதியாவது நீங்கள் கொடுங்கள் என்று சொன்ன உடனே மத்திய அமைச்சரை நான் நேரடியாக டெல்லி சென்று சந்தித்துப் பேசிய போது ஏழை மக்களுடைய கஷ்டங்களை எடுத்துச் சொன்ன உடன் 2 ஆயிரத்து 999 கோடி முதல்கட்டமாக விடுவித்தார்கள் . 100 நாள் வேலைத் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது. மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அதனால் தான் மத்திய அரசு உரிய நேரத்தில் பணத்தை நம் மக்களுக்குக் கொடுக்க முடியவில்லை. இவர்கள் உரிய முறையில் கணக்கு கொடுத்திருந்தால் நமக்கு வரவேண்டிய பணம் உரிய நேரத்தில் வரும். ஏழைகள் வயிற்றில் அடிக்கின்ற ஒரே கட்சி திமுக கட்சி. திமுக அரசாங்கம்” எனப் பேசினார்.