கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கூட்டணி வைட்து 2026 சட்டமன்ற தேர்தலே மிகப்பெரிய வெற்றிபெறும். இமாலய வெற்றி பெறும். அதன்படி ஆட்சி அமைப்போம். மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். திமுகவை அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலிலே வீழ்த்துவோம்; வெற்றி பெறுவோம். நல்ல ஆட்சியைத் தமிழகத்திலே கொண்டு வருவோம். இன்றைய தினம் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார் பல்வேறு பொதுக்கூட்டங்களிலே பேசுகிறார். எப்படி அதிமுக - பாஜவோடு கூட்டணி வைப்பீர்கள் என்று. கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவோடு கூட்டி வைத்தீர்களா?, இல்லையா?.
கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலே பாரதிய ஜனதாவோடு திமுக கூட்டணி வைத்ததா?, இல்லையா?. நீங்கள் (திமுக) கூட்டணி வைத்தால் பாரதிய ஜனதா கட்சி நல்ல கட்சி. அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அது மதவாதக் கட்சி. இதைத் தவிர்த்து வேறு ஒன்றுமே சொல்ல முடியாது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2011இல் இருந்து 2021 வரைக்கும் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். பொற்கால ஆட்சியைக் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் எதுவுமே திமுகவினரால் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்றைய தினம் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன பேசுகிறார்?, ‘எங்கே பார்த்தாலும் மதவாதக் கட்சி பாரதிய ஜனதா கட்சி’ என்று சொல்கிறார்கள். 1999இல் மத்தியிலே ஆட்சி அதிகாரத்திலே பாரதிய ஜனதா வந்தபோது திமுக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சராக இருந்தார்களா? இல்லையா?.
ஐந்தாண்டுக் காலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்திலே இருந்தார்கள். நாட்டு மக்களை இனியும் ஏமாற்று முடியாது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு மத்தியில் ஒரு வலிவான ஆட்சி. நிலையான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. 3வது முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டினுடைய பிரதமராகப் பொறுப்பேற்று இருக்கின்றார்.திமுக இந்த தேர்தலோடு முடிவெடுக்கப்படும். அதுமட்டுமில்லை மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு எதுவுமே கொடுக்கவில்லை. எதுவுமே செய்யவில்லை இதைத்தான் கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி திருப்பி திருப்பி பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். சிந்தித்துப் பாருங்கள். திராவிட முன்னேற்றக் கழகம் 1991இல் பாரத ஜனதா ஆட்சியிலே அமர்ந்திருந்தீர்கள்.
அதற்குப் பிறகு மத்தியில் அமைந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் அமர்ந்திருக்கிறது. அதற்கு முன்பு வி.பி. சிங், ஐ.கே. குஜ்ரால், தேவகவுடா என இத்தனை பிரதமர் அமைச்சரவையிலும் திமுக அங்கம் வைத்தது. இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.சுமார் 16 ஆண்டுக் காலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்திலே இருந்தது திராவிட முன்னேற்ற கழகம். 16 ஆண்டு காலத்தில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தீங்களே?. தமிழகத்திற்கு என்ன செஞ்சீங்க?. என்ன ஒரு பெரிய திட்டத்தைக் கொண்டு வந்தீங்க. என்ன நிதியை கொண்டு வந்தீங்க. ஒன்றுமே இல்லை. குடும்பத்திலே இருக்கின்றவர்களுக்கு மத்தியில் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும்.
மத்தியிலே ஆட்சி அதிகாரத்தை வைத்து கொள்ளை அடிக்க வேண்டும் அதுதான் திமுகவினுடைய குறிக்கோள். உண்மையிலேயே இப்பொழுது பேசுகின்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே மத்தியில் ஆட்சி அதிகாரம் என 16 ஆண்டுக் காலம் இருந்தபோது மக்களைப் பற்றிச் சிந்தித்தீர்களா?. நீங்கள் சிந்தித்திருந்தால் நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம். நிறைய நிதிகளைக் கொண்டு வந்திருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாமல் ஏதேதோ தங்களுக்கு நினைத்த கருத்துக்களை எல்லாம் அவதூறு செய்திகளாக வெளியிட்டு இந்த தேர்தலிலே வெற்றி பெறலாம் என்று உங்களுடைய கனவு பலிக்காது. உங்களுடைய கனவு பகல் கனவாகத்தான் இருக்கும்” எனப் பேசினார்.