அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி இன்று (11.07.2025) பேசுகையில், “அதிமுக ஆட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் மூலம் வழங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
விவசாயத் தொழிலாளி சுயமாகச் சம்பாதிக்க வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் விலையில்லா கறவை மாடுகள் வாங்கி கொடுத்தோம். விலையில்லா ஆடுகள் கொடுத்தோம். அந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். ஆக விவசாய தொழில் சிறக்க வேண்டும். விவசாயம் நன்றாக இருக்க வேண்டும். அதில் பாடுபடக்கூடிய விவசாயத் தொழிலாளியும் நன்றாக இருக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டம் மூலமாக விவசாயத் தொழிலாளிக்கு நிறைய உதவிகளைச் செய்தோம். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் 24 மணி நேரத்தில் எந்த நேரத்துக்குப் போனாலும் பம்பு செட்டை இயக்கலாம். மும்முனை மின்சாரத்தைக் கொடுத்த ஒரே அரசு அதிமுக.
திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்பு வெளியிட்டார்கள். அதில்10% அறிவிப்பு கூட இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சரும் திமுக கட்சிக்காரர்களும் பேசுகிறதெல்லாம் 98% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டது என்று கூறுகிறார்கள். இவ்வாறு பச்சைப் பொய்யை முழு பூசனிக்காயைத் தட்டில் உள்ள சோற்றில் மறைக்கிற மாதிரி மறைக்கிறார்கள். ஆனால் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றவில்லை” எனப் பேசினார்.