நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்குத் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் பொற்கொடியும் மற்றும் வட்டாட்சியர் விஜய்குமார் ஆகியோர் நேரில் வருகை தந்து அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மற்றும் அவரது தாயார் மாலதியை நேரில் சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன் ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர், “நவீன்குமாருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து தரப்படும். அரசின் நிவாரணங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என உறுதியளித்தார். அதே சமயம் அஜித்குமாரின் குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தது குறித்து அஜித்குமாரின் தாயார் மாலதி பேசுகையில், “என் பையனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் இந்த மாதிரி பண்ணிட்டாங்க என்று சொன்னேன். ரொம்ப கஷ்டப்பட்டு என் பிள்ளையை வளர்த்தேன். இதற்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு முதல்வர் ரொம்ப வருத்தமாகத் தான் இருக்கிறது. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
ரொம்ப கவலையாக இருக்கிறது என்று சொன்னார். முதல்வர் பேசியது கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கிறது” எனத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றம் செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம். கொலை செய்தது உங்கள் அரசு. சாரி (SORRY) என்பது தான் உங்கள் பதிலா? அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, ‘தைரியமாக இருங்கள்’ என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த முதல்வருக்கு?. முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே?.
‘என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்’ என்று சொல்கிறீர்களே... போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா?. வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே. அதை போன்ற முயற்சிதானே இதுவும்?. அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து, கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு எப்.ஐ.ஆர் (FIR) கைது எல்லாம் நடக்கிறது.
உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா?. அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?. ‘நடக்கக் கூடாதது நடந்துடுச்சு’ என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு?. இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25வது முறை. இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி” எனத் தெரிவித்துள்ளார்.