அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்டம் வடவெள்ளியில் 2வது நாளாக இன்று (08.07.2025) உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மதுரையில் கஞ்சா விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது அங்குள்ள இருக்கின்ற ஒருவரும், அவருடைய பையனும் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கிறார்கள். அவ்வாறு புகார் கொடுத்த உடனே கஞ்சா விற்கின்ற நபர்கள், புகார் கொடுத்த நபரின் வீட்டிற்குத் தேடிச் சென்று தந்தையும் மகனையும் அரிவாளால் வெட்டுகின்ற காட்சி இன்றைய தினம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது.
நான் இங்கே வரும்போது கூட தொலைக்காட்சியில் நான் பார்த்துட்டு வந்தேன். இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆட்சி அவல் ஆட்சி தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்தமா நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு இல்லை. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா?. யாரை நம்பி மக்கள் இருக்கிறார்கள்?. அரசாங்கத்தை நம்பி இருக்கிறார்கள். அந்த அரசாங்கம் சிறப்பாகச் செயல்பட்டால் தான். காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டால் தான் மக்களைப் பாதுகாக்க முடியும். பயிருக்கு வேலி எப்படி முக்கியமோ அது போல நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு முக்கியம்.
இந்த ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. திமுக ஆட்சி இருக்கும் வரைக்கும் இனி மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் இருக்கின்ற போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். இன்றைய தினம் அன்றாடம் அச்சத்திலே உறைந்து போய் வாழ்கின்ற காட்சியை இன்றைக்குப் பத்திரிகையில் ஊடகத்திலும் பார்க்கிறோம். அதுமட்டுமில்லை கோவையில் ஒரு காவலரும் அவருடைய மனைவியும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த காவலரை மறித்துத் தாக்கி அவருடைய மனைவியின் நகைகள் எல்லாம் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். காவலருக்கே பாதுகாப்பு இல்ல. அப்புறம் யார் நம்மைப் பாதுகாப்பது. கோயம்புத்தூர் நகரத்தில் மக்களைப் பாதுகாக்கக் கூடிய காவலருக்குப் பாதுகாப்பு இல்லை. இப்படிப்பட்ட ஒரு ஆட்சி தேவையா? எனக் கேள்வி எழுப்பினார்.