அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டையில் அதிமுகவின் புதிய பிரச்சார திட்டத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (25.07.2025) வெளியிட்டார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் இந்த தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளது. “உருட்டுகளும் திருட்டுகளும்” என்ற பெயரில் திமுகவிற்கு எதிராக அதிமுக இந்த பரப்புரையைத் தொடங்கியுள்ளது.
அதில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைச் சுட்டிக்காட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளை அட்டையில் எழுதி ஸ்பின் தி வீல் விளையாட்டு (SPIN THE WHEEL) போன்று உருவாக்கி மக்களிடம் கொண்டு சென்று திமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? இல்லையா என்பதை மக்களிடமே கேள்வி கேட்டு அதற்கான பதில் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பிரைம் மினிஸ்டர் வீட்டின் கதவைத் தட்டினார்கள். அவர்கள் கதவைத் தட்டினால் சரி. நாங்கள் உள்துறை அமைச்சரைச் சந்தித்தால் தவறா?. இந்திய நாட்டுடைய உள்துறை அமைச்சர் தானே அவர். இதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. அதுமட்டும் இல்ல நான் டெல்லிக்குப் போன உடனே இதே முதலமைச்சர் சட்டமன்றத்தில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றிருக்கின்றார். ஏதாவது ஒரு வாய்ப்பில் மத்திய அமைச்சரைச் சந்தித்தால் தமிழ்நாட்டுடைய பிரச்சனையைச் சொல்லுங்கள் என்று அவர்களே சொன்னார்கள். இது குறித்து எல்லா பத்திரிகையிலும் வந்திருக்கிறது. அப்புறம் இப்படிப்பட்ட கேள்வயை அவர்களே கேட்கிறார்கள்” எனப் பேசினார்.