அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்டம் வடவெள்ளியில் 2வது நாளாக நேற்று முன்தினம் (08.07.2025) உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''அறநிலைத்துறையில் கோவில் பணம் இருந்தது. பொறுக்க முடியவில்லை. நான் சொல்லக்கூடாது. என்னவென்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நான் சொன்னால் வேறுவிதமாகிவிடும். கண்ணை உறுத்துகிறது. கோவிலைக் கண்டாலே கண்ணை உறுத்துகிறது. அதில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். கோவில் கட்டுவதற்காக உங்களைப் போல் இருக்கின்ற நல்ல உள்ளங்கள், தெய்வ பக்தி கொண்டவர்கள் உண்டியலில் பணம் போடுகிறீர்கள்.
அது அறநிலையதுறைக்கு சேர்கிறது. எதற்காக சேர்கிறது கோவிலை அபிவிருத்தி பண்ணுவதற்காக விரிவுபடுத்துவதற்கு உள்ள அந்த பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். ஏன் அரசாங்கத்தில் இருந்து கல்லூரி கட்டினால் வேண்டாமா? நாங்கள் கொடுத்தோம் அல்லவா? அதிமுக ஆட்சியில் இத்தனை கல்லூரிகளை நாங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். நாங்கள் கட்டிய அனைத்து கல்லூரியும் அரசாங்கப் பணத்தில் கட்டி இருக்கிறோம். அறநிலையத்துறையில் இருக்கும் நிதியை எடுத்து இதற்கு செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம். சிந்தித்துப் பாருங்கள். இதையெல்லாம் சதிச்செயலாக தான் மக்கள் பார்க்கிறார்கள்.
பல மக்கள் என்னிடத்தில் இதுகுறித்து கோரிக்கை வைத்தார்கள். கல்விக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது முக்கியம். ஒரு மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ அதுபோல ஒரு நாட்டிற்குக் கல்வி முக்கியம். ஆனால் அந்த கல்வி அரசாங்கத்தில் இருந்து கொடுக்கலாம். ஏன் அரசாங்கத்தில் பணம் இல்லையா? பத்து கல்லூரிக்கு தேவையான பணம் இல்லையா?'' என்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் ஜூலை 14ஆம் தேதி கோவை டாடாபாத் சிவானந்தா காலனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் இன்று (10.07.2025) பேசுகையில், “அறநிலையத்துறையில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தால் எடப்பாடி பழனிசாமி கொதிக்கிறார் என்று சொல்கிறார்கள். அறநிலையத்துறையில் இருந்து நீங்கள் எடுத்து கொடுக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மாணவருக்கு தேவையான திட்டத்தை முழுமையான நிதி அறநிலையத்துறையில் இருந்து கிடைக்காது. ஏன்னென்றால் கல்லூரி வளர வளர கட்டடம் தேவை. அதற்கு பல பிரிவுகள் புதுசு புதுசா உருவாக்க வேண்டும். அரசாங்க கல்லூரியாக இருந்தால் அனைத்தும் கிடைக்கும். ஆனால் அறநிலையத்துறையாக இருந்தால் நிதிகள் பெறுவது சிரமம். மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்குதான் இதனை நான் சுட்டிக்காட்டினேன்.
ஏன்னெறால் ஏற்கனவே இன்னைக்கு பல்கலைகழகத்தில் இருந்த உறுப்பு கல்லூரியில் இருக்கிற மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்னு சொல்லி தான் அரசு கலைக் கல்லூரி ஆக்கினோம். அதே மாதிரி கூட்டுறவு சக்கரை ஆலையில் இருந்த பாலிடெக்னிக் கல்லூரிகள் எல்லாம் பாதிக்கப்படுகிறது என்று சொன்னதால் தான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆக்கினோம். அப்படிப்பட்ட நிலைமை அறநிலையத்துறையில் துவக்கப்படுகின்ற கல்லூரிக்கு வரக்கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு, உயர்ந்த நோக்கத்தோடு மானவர்களின் எதிர்காலம் கருதி அரசு கலைக்கல்லூரியை துவங்க வேண்டும் என்று தான் சொன்னேனே ஒழிய. கல்லூரி வேண்டாம் என்று சொல்லவில்லை.
வேண்டும் என்ற திட்டமிட்டு பொய்பிரச்சாரம் செய்கின்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே ஏன் உங்கள் அரசாங்கத்தில் பணம் இல்லையா?. அரசு திவால் ஆகி போய்விட்டதா?. அரசாங்கத்தில் இருந்து பணம் கொடுக்க பணம் இல்லையா?. கடலில் பேனா சிலை வைக்க 82 கோடி இருக்கிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் பந்தயம் நடத்துவதற்கு 42 கோடி இருக்கிறது” எனப் பேசினார்.