அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரத்தில் ஒரு தாய் தழுதழுத்த குரலில் அண்ணா, நீங்க மீண்டும் எப்ப முதல்வரா வருவீங்க? என கூட்டத்தில் இருந்து என்னைப் பார்த்துக் கேட்டபோது, 2026இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே உணர்ந்தேன். எம்.ஜி.ஆர் தோற்றுவித்த, ஜெயலலிதா வளர்த்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் ஜனநாயக இயக்கம், தமிழ் நாட்டு மக்களின் நாடி நரம்புகளில் ரத்தவோட்டமாகக் கலந்திருப்பதை மீண்டும் ஒருமுறை அனுபவப்பூர்வமாகக் கண்டு மகிழ்ந்தேன்.
மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்கிற இந்த எழுச்சிப் பயணம் எனக்கும், என்னைப் போன்ற கோடிக்கணக்கான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும் உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால், ஆட்சிக்கு வந்த இந்த 52 மாதங்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, பல பொய்களை மட்டுமே கூறி மக்களை மடைமாற்றம் செய்து, வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. உங்களுடன் நான் - எங்களுடன் நீங்கள் என்றெல்லாம் வெற்று விளம்பரங்கள் மட்டுமே செய்து, இந்த ஆட்சி, தன்னுடைய பித்தலாட்டத்தை தொடர்கிறது. தங்களின் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்கள் நலத்தை தள்ளிவைத்துவிட்டு, தமிழ் நாட்டைக் கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது அமைச்சரவை சகாக்களும்.
நகராட்சி சொத்துக்களை கொள்ளையடிக்கும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, எழுச்சிப் பயணத்தை தவறாக சித்தரித்து சம்மந்தியை மீட்போம், சம்பாதித்த பணத்தைக் காப்போம், மக்களை மறப்போம், தமிழ் நாட்டை விற்போம், மகனைக் காப்போம், என என் மீது அவதூறு பரப்பி இருக்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால், 'மந்தி தனது குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்' என்ற பழமொழிக்கு ஏற்றார்போல், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் நேருவை விட்டு அறிக்கை என்ற பெயரில் ஆழம் பார்த்திருக்கிறார். அதாவது, நேருவின் ஆழ்மனதில் ஸ்டாலினைப் பற்றி உள்ள மருமகனைக் காப்போம் - மகனைக் காப்போம், ரியல் எஸ்டேட் மூலமாக தமிழ் நாட்டை கூறுபோட்டு விற்போம், மக்களை மறப்போம், போதைப் பழக்கத்தை பரப்புவோம், இயற்கை வளங்களை சுரண்டுவோம், பல்லாயிரம் கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்போம், சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்து, ஊழல் பணத்தை தமிழ் நாட்டிற்கு கொண்டு வருவோம்' என்ற அவர்களின் எண்ணத்தைக் கூறும் விதமாகவே அமைச்சர் நேருவின் பேச்சு உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்கள் பொய்யான வாக்குறுதிகளையும், ஆட்சியையும் கண்டு, உண்மை முகத்தை அறிந்து உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் அனைவரும் உறுதி ஏற்றுவிட்டார்கள். தமிழக மக்களின் உள்ளம் திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது. அவர்கள் அடைந்திருக்கும் தாழ்வைப் போக்க சபதமேற்றுவிட்டது. மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்கிற என்னுடைய முதற்கட்ட எழுச்சிப் பயணத்தின் மூலம், நான் உணர்ந்ததை, உங்கள்அரசுக்கு ஒரு குறள் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. இவற்றை எல்லாம் நீங்கள் தமிழகத்துக்குச் செய்யவில்லை என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் குற்றச்சாட்டு.
நீங்கள் என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி, எனது எழுச்சிப் பயணம் தொடரும். மக்கள் ஆதரவு இன்னும் பெருகும். 2026இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று, அனைத்து மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நல் ஆட்சியை வழங்குவோம். தவறு செய்த தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும் அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்” எனத் தெரிவித்துள்ளார்.