வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில்  அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 25ஆம் தேதி (25.06.2025)  நடைபெற்ற விழாவில் திறந்து வைத்தார். இந்த விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, ஆர். காந்தி, மா. சுப்பிரமணியன், எஸ்.எம். நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ். ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமலு, கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர்  ப. செந்தில்குமார், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் போன்றவை அமைக்கப்படும்போது, அவை முழுமையான பயன்பாட்டிற்கு உகந்த வகையில் கட்டப்பட்டுள்ளதா?. தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் உள்ளதா? என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் திறப்புவிழா நடத்தப்பட வேண்டும். 'அதிசயம், ஆனால் உண்மை' என்பதுபோல், ஒரு வாரத்திற்கு முன்பு (25.6.2025) மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில்; உள்கட்டமைப்பு முழுமையாக ஏற்படுத்தாத நிலையில், எந்தவித வசதியும் இல்லாமல் வெற்று விளம்பரத்திற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை (Multi Speciality Hospital) என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தைத் திறந்தார். 

விட்டதடி ஆசை. விளாம்பழம் ஓட்டோடு' என்பதுபோல், இம்மருத்துவமனை திறந்த வேகத்திலேயே மூடு விழாவும் கண்டிருக்கிறது. இம்மருத்துவமனை அவசர கதியில் திறக்கப்பட உள்ளதாக, ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டபோது, மருத்துவத் துறையைப் பற்றி எதுவுமே தெரியாத அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழ வழ கொழ கொழ என்று பேட்டி அளித்து பூசி மெழுகினார். முதலமைச்சர் திறந்துவைத்த மருத்துவமனை இப்போது மூடப்பட்டது ஏன்?. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய அரசு மருத்துவமனையை, விளையாட்டுப் பிள்ளைகளின் மைதானம் போல் நினைத்து இந்த திமுக அரசு நடந்துகொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். 

திமுக  ஆட்சியின் அலட்சிய போக்கைக் கண்டித்தும்; பலகோடி செலவில் கட்டப்பட்ட சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அனைத்து வசதிகளோடு மீண்டும் முறையாக திறந்து செயல்படுத்தவும் வலியுறுத்தி, அதிமுக வேலூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், வரும் 8ஆம் தேதி (08.07.2025 - செவ்வாய்க்கிழமை” காலை 10 மணி அளவில், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமானமுக்கூர் என். சுப்பிரமணியன் தலைமையிலும்; வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு முன்னிலையிலும் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.