மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சிக் காலங்களில், மக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறப்பான முறையில் மருத்துவத் துறை செயல்பட்டு வந்தது. ஆனால், திமுக ஆட்சியில், நோய்வாய்ப்படும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தோல்வியையே சந்தித்துள்ளது. இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில், இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் அண்ணாசாலை மெயின் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் எனது தலைமையிலான ஆட்சியில், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 30 படுக்கை வசதிகளைக் கொண்ட முழு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதிமுக அரசின் சாதனையை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டி, 23.2.2025 அன்று இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்று முதல் இம்மருத்துவமனை முறையான பராமரிப்பு இன்றி இயங்கி வந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வுக்குச் சென்றபோது, மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் பணியில் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நோய்வாய்ப்படும் மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், மேல்விஷாரத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை, எளிய மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும்; மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், அதிமுக இராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தின் சார்பில் வரும் 10ஆம் தேதி (10.07.2025 - வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், மேல்விஷாரம் கத்துவாடி கூட்டு ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமாருமான சேவூர் இராமச்சந்திரன், தலைமையிலும்; இராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர். சுகுமார் முன்னிலையிலும் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.