Advertisment

“அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்” - இ.பி.எஸ். அறிவிப்பு!

eps-pm-mic

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து அதிமுக  சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி   தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 50 மாத கால  திமுக அரசு, மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். திருவண்ணாமலை மாநகரில் அறநிலையத் துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளின் அலட்சியத்தாலும், ஆமைவேகப் பணிகளினாலும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திண்டாடுகின்றனர்.

Advertisment

அந்த வகையில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், திருவண்ணாமலையில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால், பக்தர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முறையான வழிமுறைகளைக் கையாளாததால்,  அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு நாள்தோறும் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலமணி நேரம் காத்துக்கிடக்கும் அவலம்.குறைந்தது 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யாத அவலம். தமிழ் நாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதேபோல், முறையான பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால் அடாவடி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

ஆமை வேகத்தில் மாட வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல். மாட வீதிக்கு வாகனங்கள் வரத் தடை இருக்கின்ற காரணத்தால் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு. மோசமான சாலைகள், சாலைகளில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதிக்குள்ளாகும் அவலம். மாநகராட்சி கடைகளுக்கு பல மடங்காக வாடகை உயர்வு. திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அதனை மாநகராட்சியுடன் இணைத்து ஏழை, எளிய மக்களிடமிருந்து கூடுதல் வரிகளை மட்டுமே வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும்,  திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத அறநிலையத் துறையைக் கண்டித்தும், திருவண்ணாமலை மாநகராட்சியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆமை வேகத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் அரசுத் துறையினரைக் கண்டித்தும், அரசுத் துறைகளின் நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுகஅரசை கண்டித்தும்; பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ அதிமுக திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் வரும் 16ஆம் தேதி (16.07.2025 - புதன்கிழமை) காலை 10 மணியளவில் திருவண்ணாமலை மாநகராட்சி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி வீரமணி தலைமையிலும்; திருவண்ணாமலை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். இராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார். 

Edappadi K Palaniswamy admk hrce tiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe