அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை மீட்போம். மக்களை காப்போம் என்ற முழக்கத்தோடு ஜூலை 7ஆம்தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு ஜூலை 16ஆம் தேதி வருகை தருகிறார். இதனையொட்டி அவரை சிறப்பாக வரவேற்கும் விதமாக அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என் குமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் தொகுதி சட்டமனற உறுப்பினரும் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், “திமுக அரசிடமிருந்து தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்ற முழக்கத்தோடு வருகிற 7ஆ, தேதி முதல் தமிழக முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த நிலையில் கிழக்கு மாவட்டத்திற்கு வருகின்ற 16ஆம் தேதி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகை தந்து 2 இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் அவர் பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும்” என்றார். 

இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னாள் அமைச்சரும், அதிமுக மீனவர் பிரிவு செயலருமான, ஜெயபால், அதிமுக அமைப்பு செயலாளர் என், முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வி கே மாரிமுத்து, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம், மாவட்ட கழக பொருளாளர் சுந்தர்,  சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் உறுப்பினர் சேர்க்கை பணிகளை 100% முடிக்க வேண்டும்,  ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளையும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசின் வேதனைகளையும் எடுத்துக் கூறி பிரச்சாரப் பணிகளை சிறப்போடு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 6  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 6 கோடியே 39 லட்சம் மதிப்பில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த எல். இளையபெருமாளுக்கு நினைவு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.  இதனை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 14ஆம் தேதி இரவு  ரயில் மூலம் சிதம்பரத்திற்கு வருகிறார். இதனை தொடர்ந்து 15ஆம் தேதி காலை காமராஜர் பிறந்தநாளில்  சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடை கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தினை அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி வைக்க்க உள்ளது குறிப்பிடத்தக்கது.