திருவண்ணாமலையில் திமுக சார்பில் அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று (13.07.2025) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான  உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிச்சாமி அவருடைய பிரச்சாரத்தில், ‘இந்து சமய அறநிலை துறை சார்பாகக் கல்லூரிகள் கட்டலாமா?. இது எவ்வளவு பெரிய அநியாயம்’ என்று பேசி இருக்கிறார். கோவில் நிதியில் ஏழை எளிய பிள்ளைகள் படிக்கக் கல்லூரி தொடங்கினால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏன் கோவம் வருகிறது?.

இந்து சமயம் அறநிலையத் துறையே இருக்கக் கூடாது என்று சொல்கிற பாஜகவோடு கூட்டணி வைத்ததால் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு முழு சங்கியாகவே மாறி இருக்கிறார். இன்றைக்கு அவருடைய பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு வந்ததால், ‘நான் அப்படிப் பேசவில்லை. இப்படிப் பேசவில்லை’ என்று மழுப்பிட்டு இருக்கிறார். அவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் போது வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையோடு தான் ஆரம்பித்தார். ஆனால் இன்றைக்கு முழுவதும் காவி சாயத்தோடு எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இனிமே அதை மூடிமறைத்து எந்த பயனும் கிடையாது. 

எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நீங்கள் தமிழ்நாட்டுக்குள்ள பாஜகவுக்குப் பாதை போட்டுக் கொடுக்கலாம் என்று பார்க்கிறீர்கள். உங்களைத் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் என்றைக்கும் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். உங்களுடைய அந்த எண்ணத்தைக் கருப்பு சிவப்பு வேட்டிக் கட்டிய  திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் நிச்சயம் விடமாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் நின்று அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் வீழ்த்த போவது உறுதி” எனப் பேசினார்.