அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்டம் வடவெள்ளியில் 2வது நாளாக நேற்று முன்தினம் (08.07.2025) உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''அறநிலைத்துறையில் கோவில் பணம் இருந்தது. பொறுக்க முடியவில்லை. நான் சொல்லக்கூடாது. என்னவென்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நான் சொன்னால் வேறுவிதமாகிவிடும். கண்ணை உறுத்துகிறது. கோவிலைக் கண்டாலே கண்ணை உறுத்துகிறது. அதில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். கோவில் கட்டுவதற்காக உங்களைப் போல் இருக்கின்ற நல்ல உள்ளங்கள், தெய்வ பக்தி கொண்டவர்கள் உண்டியலில் பணம் போடுகிறீர்கள். 

அது அறநிலையதுறைக்கு சேர்கிறது. எதற்காக சேர்கிறது கோவிலை அபிவிருத்தி பண்ணுவதற்காக விரிவுபடுத்துவதற்கு உள்ள அந்த பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். ஏன் அரசாங்கத்தில் இருந்து கல்லூரி கட்டினால் வேண்டாமா? நாங்கள் கொடுத்தோம் அல்லவா? அதிமுக ஆட்சியில் இத்தனை கல்லூரிகளை நாங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். நாங்கள் கட்டிய அனைத்து கல்லூரியும் அரசாங்கப் பணத்தில் கட்டி இருக்கிறோம். அறநிலையத்துறையில் இருக்கும் நிதியை எடுத்து இதற்கு செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம். சிந்தித்துப் பாருங்கள். இதையெல்லாம் சதிச்செயலாக தான் மக்கள் பார்க்கிறார்கள். 

பல மக்கள் என்னிடத்தில் இதுகுறித்து கோரிக்கை வைத்தார்கள். கல்விக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது முக்கியம். ஒரு மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ அதுபோல ஒரு நாட்டிற்குக் கல்வி முக்கியம். ஆனால் அந்த கல்வி அரசாங்கத்தில் இருந்து கொடுக்கலாம். ஏன் அரசாங்கத்தில் பணம் இல்லையா? பத்து கல்லூரிக்கு தேவையான பணம் இல்லையா?'' என்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் ஜூலை 14ஆம் தேதி கோவை டாடாபாத் சிவானந்தா காலனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  திமுக மாணவர் அணிச் செயலாளர்  ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி; ஏழை, எளிய, சாமானிய மாணவர்களுக்கு உயர்கல்வி பெற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்லூரிகளைத் திறந்து வைத்ததை, ‘கல்லூரிகளைத் திறப்பது சதிச்செயல்’ என பதவி சுகத்துக்காக பேரறிஞர் அண்ணாவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி இப்போது, ‘உங்களுக்கெல்லாம் எதற்கு கல்வி?’ என்ற சங்கிகளின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார். கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று. 

Advertisment

ஆனால் அதுகூடத் தெரியாமல் திராவிட இயக்கத்தின் துரோகியாக, கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக கோவையில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில்  ஜூலை 14ஆம் தேதி, பிற்பகல் 02.30 மணி அளவில், கோவை, டாடாபாத், சிவானந்தா காலனியில், திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.