புதுக்கோட்டை தி.மு.க  மாநகரச் செயலாளராக இருந்த செந்தில் (அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த இடத்திற்கு எம்.எம். அப்துல்லாவின் ஆதரவாளரான புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ் திமுக மாநகர பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த புதிய மாநகரப் பொறுப்பாளர் அறிவிப்பையடுத்து மாநகர வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநகரப் பொறுப்பாளரை மாற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். சென்னை சென்று கட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். அதன் பிறகும் பொறுப்பாளர் மாற்றம் செய்யப்படவில்லை.

Advertisment

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மண்டலப் பொறுப்பாளர் அமைச்சர் கே.என். நேரு பி.எல். 2 கூட்டம் நடத்த வந்தார். அப்போது வட்டச் செயலாளர்கள் மாநகரப் பொறுப்பாளரை மாற்று என்ற முழக்கத்துடன் பதாகை ஏந்தி அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்டு, “மாநகரப் பொறுப்பாளரை மாற்றுங்கள் இல்லன்னா எங்களை நீக்குங்கண்ணே” என்றனர்.  அதற்கு அமைச்சர் கே.என். நேரு, “சில நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சமாதானம் கூறி கூட்ட அரங்கிற்குச் சென்றார். இதனையடுத்து இன்று (11.07.2025) மாலை திமுக தலைமை உத்தரவின் பேரில் மூத்த தலைவர் கவிதைப்பித்தன் தலைமையில் கட்சி மாநகரப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாநகரில் 3 பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் விதமாக மொத்தம் உள்ள 42 வார்டுகளை 14 வார்டுக்கு ஒரு மாநகரப் பகுதிப் பொறுப்பாளரை நியமிக்கும் வண்ணம் வார்டுகள் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தலைமைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

இந்த அறிக்கையையடுத்து இன்று மாலை திடீரென 42 வட்டச் செயலாளர்களையும் கட்சித் தலைமை சென்னைக்கு அழைத்துள்ளது. தலைமையின் அழைப்பை ஏற்று வட்டச் செயலாளர்கள் மற்றும் மாநகரப் பொறுப்பாளர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து மாநகரப் பொறுப்பாளர் பதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் திமுகவினரும் சென்னை புறப்பட்டுள்ளனர். இது குறித்து திமுகவினர் கூறும் போது, செந்தில் மரணத்தையடுத்து அவரது மகன் கணேஷை மாநகரச் செயலாளர் ஆக்க அமைச்சர் கே.என். நேரு நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷை பொறுப்பாளராக நியமனம் செய்தது. இதனை வட்டச் செயலாளர்கள் ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தான் மாநகரை 3 பகுதிகளாகப் பிரிக்கத் திட்டமிடப்பட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே மாநகரப் பொறுப்பாளராக உள்ள ராஜேஷ் ஒரு பகுதிக்கும், செந்தில் மகன் கணேஷ் மற்றொரு பகுதிக்கும் மாநகர துணை மேயர் லியாக்கத்அலி இன்னொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்து அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை அனைத்து வட்டச் செயலாளர்களும் ஏற்று ஒற்றுமையாக கட்சிப்பணி, தேர்தல் பணி செய்ய வேண்டும் என்று சமாதானம் செய்யவே அவசரமாக வட்டச் செயலாளர்களைத் தலைமை அழைத்துள்ளது. இதிலும் ராஜேஷை அவர் சார்ந்துள்ள பகுதி வட்டச் செயலாளர்கள் ஏற்பார்களா அல்லது தலைமையிடமும் கோரிக்கை வைப்பார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் இந்த பதவிகளுக்காக 4 மாதமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் திமுகவினரும் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். தங்களுக்கு ஆதரவாக வட்டச் செயலாளர்களைத் தலைமையிடம் பேச வைக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது.120 நாள் திமுக உள்கட்சி முட்டல் மோதல்களுக்குச் சனிக்கிழமை கட்சித் தலைமை தீர்வு காணுமா? என்ற ஆர்வம் கட்சித் தொண்டர்களிடம் எழுந்துள்ளது. 

Advertisment