தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் வி.சி.க, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக,  பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடயுள்ளது. இது தவிர தேமுதிக, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த போட்டியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாக களமிறங்கியுள்ளார். அதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். இதனால், பல்வேறு கட்டமாக திமுக நிர்வாகிகளைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (28.06.2025) மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,  திமுக சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், “ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை” விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.