தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்ற தேர்தலுக்கு த.வெ.க.வும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் (26 மற்றும் 27.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் 7 ஆகிய மாவட்டங்களைச் சேர்த்த அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. 

இந்தக் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றியிருந்தார். இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை விஜய் சந்தித்துப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே த.வெ.க. கட்சிக்கொடியில் உள்ள யானை சின்னத்துக்குத் தடை கோரி பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து த.வெ.க.வுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று த.வெ.க. சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அதில், “த.வெ.க. கொடிக்கும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கொடிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை”எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் இந்த வழக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி (04.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது பகுஜன் சமாஜ்வாதி கட்சி தரப்பில் வாதிடுகையில், “தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை வேறு எந்த கட்சிகளும் பயன்படுத்த முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இது தொடர்பாக விளக்கம் அளிக்க த.வெ.க.விற்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணை ஜூலை மாதம் 1ஆம் தேதிக்கு (01.07.2025) ஒத்திவைத்திருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நாளை (02.07.2025) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வது அனுமதிப்பது தொடர்பாகப் பதிலளிக்க த.வெ.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதே சமயம் வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வது தொடர்பாக அனுமதிக்கக் கோரி பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பிலும் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.