மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளைக் கொடுத்து கட்சியைச் சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார் என்று குறிப்பிட்டு துரை வைகோ தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. துரை வைகோ, ஒருவர் எனக் குறிப்பிட்டது மல்லை சத்யாவைத் தான் மறைமுகமாகக் கூறியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இப்படியான பல்வேறு அரசியல் சலசலப்புகளுக்கு இடையே மதிமுக சார்பில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள், இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். நடந்தவற்றை மறந்து ஒன்றாக இணைந்து கட்சிப் பணியாற்ற வேண்டும் என வைகோவும் வேண்டுதல் வைத்ததை அடுத்து, இருவரும் சமாதானம் அடைந்தனர்.
இதனையடுத்து, தன்னுடைய ராஜினாமா முடிவைத் துரை வைகோ திரும்பப் பெற்றார். கடந்த 2 மாதங்களாகக் கட்சிக்குள் எந்தவித சலசலப்பு ஏற்படாத நிலையில், தற்போது மீண்டும் மதிமுகவில் சர்ச்சை எழுந்தது. கடந்த 10ஆம் தேதி வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மல்லை சத்யா குறித்துப் பேசிய வைகோ, “பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல் எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யாவும் ஊடகங்களின் வாயிலாகப் பதிலளித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவகாரம் தொடர்பாகவும், கடந்த 32 ஆண்டுக் கால பொது வாழ்க்கை தொடர்பாகவும் நீதி கேட்டு மல்லை சத்யா வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்தப் போவதாகத் தெரிவித்திருந்தார். இதற்காகச் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம நடத்த அனுமதி கேட்டு காவல்துறையினரிடம் மனு அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் மல்லை சத்யா மீது மதிமுக சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சட்டத்துறை சார்பில் அதன் செயலாளர் அரசு அமல்ராஜ் என்பவர் மூலம் போலீஸ் சங்கர் ஜிவாலிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “வைகோ குறித்து வன்மத்தோடு பேசிவரும் மல்லை சத்யா, நாஞ்சில் சம்பத் ஆகியோருக்கு கண்டனம். கட்சியின் பெயர், கொடி, தலைவரை அவமதித்துள்ளனர். கட்சி குறித்து அவதூறு, சர்ச்சை கருத்துகளைப் பதிவிடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.