தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. 

இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் தான் சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை இயக்கத்தைத் தொடங்கியுள்ள திமுக அக்கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. 

அதன்படி அக்கட்சியினர் தொடர்ந்து நேரடியாக வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது சுமார் ஒரு கோடி குடும்பத்தினரைச் சந்தித்து 2 கோடி பேரை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதனை 45 நாட்களில் முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (17.07.2025) காலை 10 மணிக்குக் காணொளி காட்சி வாயலாக நடைபெறும் என திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் முக்கிய அம்சமாக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.