தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திமுக  8 மண்டல பொறுப்பாளர்களை நியமித்துத் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதில் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கவும், அதனுடன் திமுக உறுப்பினர் சேர்கையை மேற்கொள்ளவும் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தைக் கடந்த 1ஆம் தேதி முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளார்.

இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு  திட்டத்தில் மாவட்டச் செயலாளர்களை வீடியோ கால் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, ‘தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும்’ என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர். தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை” எனத் தெரிவித்துள்ளார்.