அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு நேற்று (23.07.2025) நடைபெற்றது. இந்த விழாவை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மு.பெ. சாமிநாதன், இரா.இராஜேந்திரன், சா.சி.சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் ஆடி திருவாதிரை விழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். இவ்விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “இந்த கோவிலை வடிவமைக்கும் போது தன்னுடைய தந்தை வடிவமைத்த தஞ்சை பெரிய கோயிலைப் போன்று வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வடிவமைத்தாலும் அதற்கான அடித்தளங்களை எல்லாம் அதனைவிட பெரியதாக வடிவமைத்தார்.
அதே சமயம் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்ற போது ராஜேந்திர சோழனுக்கு ஒரு சங்கடம் தந்தையை விஞ்சிய மகனாக நாம் இருந்துவிடக் கூடாது, தந்தையுடைய பெருமையை நாம் குழைத்தவனாக இருந்து விடக் கூடாது என்பதற்காகக் கோபுரத்தை அமைக்கின்ற போது குறுக்கி தஞ்சை கோபுரத்தை விட அளவு மற்றும் உயரம் குறைவான கோபுரமாக அமைத்தார். ஒரு தந்தையுடைய பணியை அடியொற்றிச் சென்றாலும் தந்தையை மிஞ்சாத மகனாக இருக்க வேண்டும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவார். கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய கண் அசைவிற்குச் செயல்பட்டவர் இன்றைக்கு ராஜேந்திர சோழன் வழியில் அவரைதான் சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார்.
அதிலும் தந்தை மகன் அரசியல் இன்றைக்குச் சூடுபிடித்திருக்கின்ற அரசியல் காலகட்டத்தில் தந்தைக்கு அடங்கிய மகனாக இருக்க வேண்டும் என்று கங்கைகொண்ட சோழபுரம் சொல்லும் செய்தியைப் பலரும் காதில் வாங்கி செயல்பட வேண்டிய நேரம் இது” எனப் பேசினார். அமைச்சர் சிவசங்கரின் இந்த பேச்சு பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி ரீதியாக வெளிப்படையாக மோதல் நீடித்து வரும் நிலையில் அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் மறைமுகமாக அறிவுரை வழங்கியுள்ளார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.