பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலையில் பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார். அதே சமயம் ராமதாஸின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் எம்எல்ஏ அருளை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக நேற்று முன்தினம் (02/07/2025) அன்புமணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். 'ஒழுங்கு நடவடிக்கைக் குழு கொடுத்த புகார் அடிப்படையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் பாமகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது' என அன்புமணி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
பாமக எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கியது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் அதிர்ச்சியைக் கிளப்பி இருந்தது. இதற்கிடையே விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று (03.07.2025) ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''கட்சியில் இருந்து அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள் பாமகவின் கொறடாவாகவும், அதேபோல் கட்சியின் இணைச்செயலாளர் பொறுப்பிலும் தொடர்வார்'' என அறிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமாரை நியமிக்கக்கோரி அன்புமணி ராமதாஸ் கொடுத்த பரிந்துரை கடிதத்தைச் சட்டப்பேரவைச் செயலாளரிடம் அளிப்பதற்காக பாமக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்தனர்.
பாமகவில் ஜி.கே.மணி, அருள், சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட மொத்தம் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் கூட்டாகச் சட்டப்பேரவை செயலகத்திற்கு வந்தனர். இதனையடுத்து புதிய கொறடாவாக சிவக்குமாரை முன்மொழிவதாகச் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இந்நிலையில் பாமக கொறடா பொறுப்பில் அருள் நீடிப்பார் எனச் சட்டப்பேரவை செயலாளருக்கு ராமதாஸ் தரப்பில் இருந்து கடிதம் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக அருள் எம்.எல்.ஏ. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பாட்டாளி மக்களுடைய சட்டமன்ற கொறடாவாக சேலம் மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ. அருளாகிய நானே தொடர்வேன் என்பதற்காகப் பாட்டாளி மக்கள் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் வழங்கிய கடிதத்தைச் சட்டப்பேரவையின் முதன்மை செயலாளரிடமும், சபாநாயகரின் தனிச்செயலாளரிடமும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவரே ராமதாஸ் தான். பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனராக இவ்வளவு நாள் இருந்தவர் தற்போது தலைவராக உள்ளார். 46 ஆண்டு காலமாக பாமக என்ற கட்சியைத் துவங்கி ஊமை ஜனங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற ராமதாஸ் தான் பாட்டாளி மக்களுடைய தலைவர். என்னுடைய அண்ணன் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக மருத்துவர் ஐயா அவர் அறிவித்திருக்கிறார். இதற்கிடையே செய்தியாளர் ஒருவர், “இப்போது கொடுத்த கடிதம் ஏற்கனவே கொறடாவாக நியமிக்கப்பட்டபோது கொடுத்த கடிதமா?, இந்த கடிதத்தை யார் கொடுத்தது?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அருள், “அது என்னுடைய ஐயா கொடுத்த கடிதமா, ஜி.கே. மணி கொடுத்த கடிதமா என எனக்குச் சரியா தெரியவில்லை” எனப் பதிலளித்தார்.