வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி திமுக அரசைக் கண்டித்து அன்புமணி தலைமையில் விழுப்புரத்தில் இன்று (20.07.2025) பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அன்புமணி பேசுகையில், “வேண்டும் என்றே இந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பிடிவாதத்தில் உள்ளனர். அவர்கள் மனதில் ஆணவம் உள்ளது. இந்த மக்கள் எல்லாம் முன்னேறக் கூடாது. ஓட்டு மட்டும் தான் போட வேண்டும் என்ற ஆணவத்துடன் நிற்கின்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருகின்ற காலம் நிச்சயமாகப் பதில் சொல்லும். உறுதியாக நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பதில் சொல்லுவோம். 

வன்னியர்களுக்கு எதிரானது திமுக. வன்னியர் எதிரி திமுக. முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சியான திமுகவுக்கு வருகின்ற தேர்தலில் ஒரு ஓட்டு  கூடப் போகக்கூடாது. அப்படிச் செய்யலாமா?. செய்தே ஆகவேண்டும். ஒரு ஓட்டு கூடப் போகக்கூடாது. ஏனென்றால் நாம் எல்லாம் படிக்கக்கூடாது. நாம் வேலைக்குப் போகக்கூடாது என்று அவ்வளவு ஆணவத்துடன் இருக்கின்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் இந்த தேர்தலில் நாம் மிகப்பெரிய ஒரு பாடத்தை நாம் புகட்டுவோம். அதற்கு என் தம்பிகளும், என் தங்கைகளும் தயாராகுங்கள். ஏனென்றால் இந்த இட ஒதுக்கீடு முக்கியமானது. நான் இன்னொன்று சொல்கிறேன். இன்றைக்கு திமுகவில் மொத்தம் 133 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் திமுக சின்னத்தில் நின்றவர்கள். அதில் எத்தனை பேர் வன்னியர்கள் தெரியுமா?. 23 பேர். இந்த 23 பேர் திமுகவில் சட்டமன்ற உறுப்பினர்கள். வன்னியர்கள்.

5 பேர் மக்களவை உறுப்பினர்கள் (லோக்சபா எம்பி 5 பேர்). நான் கேட்கிறேன் இவர்களுக்கு எந்த உணர்வாவது இருக்கிறதா?. இவளுக்கு உள்ள ஓடுற இரத்தம் என்ன இரத்தம்?. இவர்கள் எப்படி எம்.எல்.ஏ. ஆனார்கள், எம்.பி. ஆனார்கள். இவர்கள் திறமையின் மூலமா?. அதில் ஒரு சிலர் கொஞ்சம் திறமைசாலிகள் தான். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் மற்றவர்கள் எல்லாம் எப்படி எம்.எல்.ஏ. ஆனார்கள். எம்பி ஆனார்கள். அவர்கள் ஜாதி வச்சுதான். இந்த 28 பேரும் அதுல 4 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.  என்றைக்காவது ஒரு நாளாவது இந்த 28 பேரும் அதாவது 23 எம்.எல்.ஏ.க்கள் ஐந்து எம்.பி.க்கள் 4 அமைச்சர்கள் என்றைக்காவது ஒரு நாள் முதலமைச்சரைப் பார்த்து, ‘எங்கள் சமுதாயம் மோசமாக இருக்கிறது.

எங்கள் சமுதாயத்துக்குப் பிள்ளைகள் படிக்க முடியவில்லை. படிக்க முடியாத காரணத்தால் அவர்கள் வேலைக்குப் போக முடியவில்லை. வேலைக்குப் போக முடியாத காரணத்தால் அவர்கள் குடி, போதை பழக்கத்திற்கு எல்லாம் அடிமையாகி இருக்கிறார்கள். எப்படியாவது இந்த சமுதாயத்தை காப்பாற்றுங்கள். இந்த சமுதாயத்துக்கு எப்படியாவது கொஞ்சம் இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று’ திமுக எம்.எல்.ஏ.வோ, எம்.பி.யோ யாராவது ஒருத்தர் பேசுகிற திராணி இருக்கா உங்களுக்கு?. பேசி இருக்கிறீர்களா?. முதலமைச்சரிடம் பேசி இருக்கிறீர்களா?. பேசுவதற்கு உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா?. திராணி இருக்கா? எனப் பேசினார்.