அன்புமணி ராமதாஸ் டெல்லி பயணம்?

anbumani-ramadoss-meeting

பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலையில் பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் எனவும் ராமதாஸ் தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக இன்று (29.06.2025) மாலை அல்லது நாளை (30.06.2025) காலை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாமகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் தலைவராக இருப்பவருக்கும், பொதுச் செயலாளராக இருப்பவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடச் சின்னம் பெறுவதற்கும், கையெழுத்திடவும் அதிகாரம் உள்ளதாக அக்கட்சி விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் ராமதாஸ் வழிகாட்டுதலின் பெயரில் தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்ற விதியும் இருப்பதாக பாமக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் ஆணையத்திற்குச் செல்வதற்காக அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்கிறாரா அல்லது பாஜக மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்காக டெல்லி செல்கிறாரா என்பது குறித்து தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் இன்று மாலை அல்லது நாளை காலை அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் அவர் ஒரு முழுநாள் பயணத் திட்டமாக டெல்லியில் தங்கி இருப்பார் எனவும் பாமக வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

anbumani ramadoss Delhi pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe