தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  இதன்  ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டையில் அதிமுகவின் புதிய பிரச்சார திட்டத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (25.07.2025) வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் இந்த தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளது. “உருட்டுகளும் திருட்டுகளும்” என்ற பெயரில் திமுகவிற்கு எதிராக அதிமுக இந்த பரப்புரையைத் தொடங்கியுள்ளது. அதில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது  திமுக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைச் சுட்டிக்காட்டி  திமுக சார்பில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளை அட்டையில் எழுதி ஸ்பின் தி வீல் விளையாட்டு (SPIN THE WHEEL) போன்று  உருவாக்கி மக்களிடம் கொண்டு சென்று  திமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? இல்லையா என்பதை மக்களிடமே கேள்வி கேட்டு அதற்கா பதில் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.