கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. காவல்துறையினரால் அஜித் என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், சிங்கம்புணரி அருகே இரண்டாம் வகுப்பு மாணவன் பூட்டிய காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் போன்றவை அடுத்தடுத்து நிகழ்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (30.07.2025) சிவகங்கை ஆண்டிச்சியூரணி பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி விடுதி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், ஒச்சந்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்ஸிஸ். இவரது மூத்த மகள் பிருந்தா (14). இவர், காளையார்கோவில் அருகே உள்ள ஆண்டிச்சியூரணி பகுதியில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி, சூசையப்பர் பட்டணத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல், நேற்று முன்தினம் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு, மாணவிகள் அனைவரும் தங்களது அறைகளுக்கு தூங்கச் சென்றனர். அந்த வகையில், மாணவி பிருந்தாவும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாலையில் விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில் மாணவி பிருந்தா தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு, சக மாணவிகள் அதிர்ச்சியடைந்து விடுதி காப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர், விடுதி ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காளையார்கோவில் காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பிருந்தாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறுமியான மாணவி பிருந்தா எப்படி மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்க முடியும் என்ற கேள்வியை பெற்றோரும் உறவினர்களும் எழுப்பியுள்ளனர்.

இதனிடையே, மாணவியின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி ஆசிரியர்கள் அல்லது விடுதி ஊழியர்கள் யாரேனும் மாணவியை தற்கொலைக்குத் தூண்டும் வகையில் நடந்து கொண்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.