ஓசூரில் தனியார் காப்பகத்தில் தங்கிப் பயின்று வந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் அதை மறைக்க முயற்சி செய்த குற்றத்தில் தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மத்தகிரி பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒரு தனியார் காப்பகத்தில் 33 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த காப்பகத்தில் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தங்கி நான்காம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவிக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுமி ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது தெரியவந்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் காப்பகத்தின் தாளாளர் சாம் கணேஷ் என்பவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். தொடர்ந்து சிறுமியின் தாயிடம் காப்பகத்தை நடத்தி வரும் சாம் கணேஷ் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/22/a5314-2025-09-22-11-35-39.jpg)
அதை ஏற்காத மாணவியின் தாய் கிருஷ்ணகிரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டு ஓசூர் அரசு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட காப்பகத்தின் தாளாளர் சாம் கணேஷ், மறைக்க முயன்ற அவரது மனைவி ஜோஸ்பின் மற்றும் நாத முரளி, செல்வராஜ், இந்திரா ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட சாம் கணேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.