வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் மதுபோதையில் இன்று இரவு பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, ரங்காபுரம் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, பின்னர் சாலையோரம் நின்றிருந்த அரசு பேருந்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில், வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து திரும்பிச் சென்று கொண்டிருந்த ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தைச் சேர்ந்த கரிமுல்லா, அவரது மனைவி, பத்து வயது மகன், மூன்று வயது மகள் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மதுபோதையில் காரை ஓட்டி வந்த சுதாகரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே, வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில், பெங்களூருவிலிருந்து வேலூர் நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, எதிர் பாதைக்குச் சென்றுள்ளது. இதில், காரில் இருந்த ஐந்து பேரில் மூன்று பேர் தூக்கி வீசப்பட்டு, ஒருவர் மேம்பாலத்தின் மேல் இருந்து கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது விழுந்துள்ளார். இந்த விபத்தில், வேலூர் தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த வேலூர் வடக்கு காவல்துறையினர், ஐந்து பேரையும் மீட்டு, வேலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரு விபத்துகளில், இரு குழந்தைகள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், ஐந்து பேர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஐந்து வாகனங்கள் சேதமடைந்துள்ளன.