ஆந்திரா மாநிலம் காசிபுக்காவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனியார் சார்பில் கட்டப்பட்ட, வெங்கடேஸ்வர சாமி கோயில் உள்ளது. இங்கு வழக்கமாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான வசதிகள் மட்டுமே உள்ளது இந்நிலையில் இன்று (01.11.2025) ஏகாதசி மற்றும் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சாமி தரிசனம் செய்வதற்காகப் பலாசா, காசிபுக்கா மற்றும் ஸ்ரீகாகுளம் என பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர்.
அதே சமயம் கோவில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையில் இருப்பதற்காகத் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் தான் இந்த தடுப்பு கம்பிகள் பக்தர்கள் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒருவர் மீது ஒருவர் கீழே விழுந்ததில் பலர் வந்து படுகாயம் அடைந்தனர். மேலும் 9 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அதே சமயம் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு பலாசா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கோவில் தனியாருக்குச் சொந்தம் என்பதால் இங்கு போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை என்றும், எவ்வித முன் ஏற்பாடுகளும் செய்யாமல் இருந்ததே இந்த விபத்திற்கான காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல்அறிந்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அந்த மாவட்டத்தின் அமைச்சராக உள்ள அச்சம்நாயுடுவை நேரில் சென்று பார்வையிட்டு நடந்த விவரங்களை அறிந்து, காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அறிந்து நான் வேதனையடைந்தேன்.
எனது எண்ணங்கள் தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் நிவாரண நிதியில் (PMNRF) இருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us