சொத்துக்காகச் சண்டையிடுவது, அடித்துக்கொள்வது, ஒரு கட்டத்தில் கொலை செய்வது என்று பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், தனது ரத்த உறவு இல்லாத ஒரு பெண்ணுக்கு, 89 வயது முதியவர் ஒருவர் தனது ஆடம்பர பங்களாவை உயில் எழுதிக் கொடுத்திருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் குஸ்தாத் போர்ஜோர்ஜி(Gustad Borjorji)இன்ஜினியர். டாடா நிறுவனத்தில் பணியாற்றிய இவர், தனது மனைவியுடன் அகமதாபாத்தில் உள்ள தனது ஆடம்பர பங்களாவில் வசித்து வந்தார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், 2001ஆம் ஆண்டு குஸ்தாத்தின் மனைவி உயிரிழந்தார். இதனால் தனிமை அவரை வாட்டியது.
அப்போது அவரது வீட்டில் பராமரிப்பாளராகவும், சமையல்காரராகவும் ஒரு பெண்மணி பணியாற்றி வந்தார். அவருடன் அவரது பேத்தி அமிஷா மக்வானாவும் அங்கே தங்கியிருந்தார். வீட்டில் பாட்டிக்கு உதவிகள் செய்து வந்த அமிஷா, சிறுமியாக இருந்தபோதும், குஸ்தாத்தை கவனமாகப் பராமரித்து வந்தார். மனைவியை இழந்த குஸ்தாத்திற்கு அமிஷாவின் பாசம் ஆறுதலையும், மன நிம்மதியையும் அளித்தது. இதனால், அமிஷா மீது அளவற்ற பாசம் கொண்ட குஸ்தாத், அவரது கல்விச் செலவுகளை முழுமையாக ஏற்று, நன்றாகப் படிக்க வைத்தார்.
இந்நிலையில், 2014ஆம் ஆண்டு குஸ்தாத் தனது 89வது வயதில் முதுமை காரணமாக உயிரிழந்தார். இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன், தான் வாழ்ந்த 1,431 சதுர அடி பரப்பளவு கொண்ட சொகுசு பங்களாவை, 13 வயதுவரை தன்னை மகளைப் போல கவனித்து வந்த அமிஷா மக்வானாவுக்கு உயில் எழுதி வைத்திருந்தார். அமிஷா அப்போது சிறுமியாக இருந்ததால், சொத்தின் பாதுகாவலராக தனது மருமகன் பெஹ்ராமை நியமித்திருந்தார். அமிஷா வயது முதிர்ந்த பிறகு சொத்து அவருக்கு கிடைக்கும் வகையில் உயிலை அமைத்திருந்தார். அவரது இறப்புக்குப் பின் இந்த விவரம் தெரியவந்ததையடுத்து, பெஹ்ராம் சொத்தைப் பாதுகாத்து வந்தார்.
கடந்த ஆண்டு, 18 வயதைப் பூர்த்தி செய்த அமிஷா மக்வானா, தனது வழக்கறிஞர் ஆதில் சையத் மூலம் உயிலின் உரிமை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு, ஆட்சேபனைகள் ஏதேனும் உள்ளனவா என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், குஸ்த்தாதின் குடும்பத்தினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி உயில் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டு, அமிஷா மக்வானாவுக்கு சொத்து ஒப்படைக்கப்பட்டது.
தற்போது தனியார் நிறுவனத்தில் மனிதவளத் துறையில் பணிபுரியும் அமிஷா மக்வானா, "குஸ்தாத் என்னைத் தத்தெடுக்க விரும்பினார். ஆனால், அவ்வாறு செய்தால் எனது குடும்பத்தினரிடமிருந்து என்னைப் பிரித்துவிடும் எனக் கருதினார். எங்களுக்கு விவரிக்க முடியாத பந்தம் இருந்தது. அவர் எனக்கு தாயும் தந்தையுமாக இருந்தார்," என்று குஸ்தாத்துடனான உறவை நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.
உறவுமுறைகளிடையே சொத்து தொடர்பாகப் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ரத்த சொந்தமில்லாத ஒருவருக்கு, அவர்மீது கொண்ட தீராத அன்பின் காரணமாக தனது ஆடம்பர பங்களாவை உயில் எழுதி வைத்த குஸ்தாத்துக்கு உண்மையிலேயே பெரிய மனசுதான்....!!