மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு, முன்னதாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதாக அறிவித்திருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் போல, மகாராஷ்டிராவில் கடந்த 2024-25 ஆம் நிதியாண்டு முதல் பெண்களுக்கு மாஜி லட்கி பாஹின் திட்டத்தின் கீழ் மாதம் 1500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
அம்மாநிலத்தில், 2024 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, இந்த திட்டத்தின் கீழ் 2 கோடியே 43 லட்சம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தேர்தல் முடிந்து ஓராண்டிற்கு மேல் ஆன பின்பு, அந்த உதவி பெறும் பெண்களின் எண்ணிக்கை 2.43 கோடியிலிருந்து தற்போது 1.57 கோடியாகக் குறைத்துள்ளது அம்மாநில அரசு. இதற்குக் காரணமாக, அடையாள சரிபார்ப்பு பணிகளைக் காலக்கெடுவுக்குள் முடிக்காத காரணத்தாலும், அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளாலும் 24 லட்சம் பெண்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே போல, ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு மேல் இருப்பவர்கள் மற்றும் ஒரே குடும்பத்தில் இருவருக்கு மேல் பயன் பெறுபவர்கள் போன்றவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், நமோ விவசாயிகள் திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிதியுதவி பெற்று வரும் 8 லட்சம் பெண்களுக்கு, இந்தத் திட்டத்தின் தொகை 1500 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, பெண்களின் வாக்குகளைப் பெற வேண்டி அவரச கோலத்தில் இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நிதி உதவி வழங்கிவிட்டு, தற்போது நிதி பற்றக்குறையைச் சமாளிக்க முடியாமல் 85 லட்சத்திற்கும் அதிகமான பெண்களை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றுவது கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/mahayuti-2026-02-23-19-30-11.jpg)