ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த மொத்த வெள்ளி வியாபாரி தீபக் ஆவார். இவர் தனது காரில் வெள்ளி பொருட்களை கொண்டு வந்து வாணியம்பாடி நகைக்கடை பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம்.  நேற்று (17.02.2026) இரவு வழக்கம் போல வெள்ளி பொருட்களுடன் காரில் வாணியம்பாடி வந்த நிலையில் வெள்ளி பொருட்கள் அடங்கிய 6 பைகளை பஜார் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் இறக்கி வைத்துள்ளார். 

Advertisment

அதன் பின்னர் காரை பக்கத்து தெருவில் பாலாற்றின் கரை ஓரமாக நிறுத்தி விட்டு வியாபாரத்தை முடித்துவிட்டு கிளம்பினார். இந்நிலையில் காரின் ஓட்டுநர் மற்றும் தீபக் உடன் வந்த மற்றொரு நபர் என இரண்டு பேர் வெள்ளி பொருட்கள் அடங்கிய மூன்று பைகளுடன் காரை திரும்பக் கொண்டு வர ஆற்றங்கரை ஓரமாக சென்ற பொழுது நோட்டமிட்டு காத்திருந்த மர்ம நபர்கள் இவர்களை மடக்கி கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினார். அதோடு அவர்களிடமிருந்த செல்போன்களை பிடுங்கி வீசி எறிந்து விட்டு வெள்ளி பொருட்கள் அடங்கிய பைகளை எடுத்து கொண்டு பாலாற்றில் இறங்கி மறு‌கரைக்கு சென்றுள்ளார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மேற்படி தகவலை காரின் ஓட்டுநர் மற்றும் தீபக்கின் நண்பர் ஆகிய இருவரும் தீபக்கிடம் தெரிவித்த நிலையில் வாணியம்பாடி நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் நகர காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடியில் வெள்ளி பொருட்கள் மொத்த வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி 80 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் மயானக்கொள்ளை திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி தப்பி சென்ற கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.