திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். திமுக பிரமுகரான இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருந்தார். மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலின் வரவு-செலவு கணக்கு தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முருகனுக்கும் நீண்ட காலமாகத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், ஜூலை 24 அன்று, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோபால்பட்டி அருகே ஜோதாம்பட்டியில், முருகனின் ஸ்கார்பியோ காருக்குள் அவர் ரத்த வெள்ளத்தில் வெட்டுக் காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் நத்தம் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பிறகு காருக்குள் கிடந்த முருகனின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல்லில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கொலை செய்யப்பட்ட முருகனின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மாவட்ட எஸ்.பி.யின் மேற்பார்வையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து நேற்று (24.7.2025) 5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று (25.7.2025) 8 பேரை கைது செய்துள்ளனர். அதில் மேட்டுப்பட்டி வீரபத்திரன் (34), ரவுண்ட் ரோடு சேக் பாரீத் (29), கோவிந்தாபுரம் சரவணகுமார் (38), சங்கர் (33), செல்லாண்டியம்மன் கோயில் ராஜா (41), ஆர்.எம்.காலனி விஜய் (28), விஜயகுமார் (24), செல்லாண்டியம்மன் கோயில் அசோக் (41). ஆகிய 8 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முருகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆளும் கட்சியான திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment