செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (24.02.2026) அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை பொதுத்துறையின் சார்பில் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார். அதன்படி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக பணியாற்றி வந்த ஆர்.ஜெயா, இடமாற்றம் செய்யப்பட்டு, சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த கே.கோபால் வரும் 28ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதையொட்டி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வந்த கலைச்செல்வி மோகன்,  இடமாற்றம் செய்யப்பட்டு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின், இயக்குநராக  நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றி வந்த த. சினேகா, இடமாற்றம் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியராகப் பணியாற்றி வந்த எஸ். மாலதி ஹெலனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் ஆட்சியராகப் பணியாற்றி வந்த கு. ரவிகுமார்,   கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதைய மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேலுவுக்குப் பதிலாக இந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார். மத்திய அரசுப் பணியிலிருந்து திரும்பிய  சந்திர சேகர் சாகமூரி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். நே. பொன்மணி, ஈரோடு வணிகவரித் துறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிகாரிகளுக்கான புதிய பணியிடங்கள் குறித்த நகல்கள் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.