நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செங்கோட்டையின் கொத்தளத்திற்கு வருகை தந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாகத் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

Advertisment

இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின  உரையாற்றுகையில், “தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்' என்று நாம் தலை நிமிர்ந்து நெஞ்சை நிமிர்த்திப் பாடப் பாடுபட்ட விடுதலை வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.

விடுதலைக் காற்றைச் சுவாசிக்கக் காரணமாக விளங்கும் தியாகிகளைப் போற்றுவோம். அனைத்து சமூக மக்களும் ரத்தம் சிந்திப் பெற்றது தான் நம் விடுதலை. தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை மாநில முதல்வர்களுக்குப் பெற்றுத் தந்தவர் கலைஞர். அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் எனச் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் கனவு கண்டனர். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான தமிழ்நாடு அரசின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக  உயர்த்தப்படும். மேலும் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப்படும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், “எனது சக குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள். இந்த நாளில், ஜனநாயகம் திருடப்பட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் மதிக்கப்படும், பன்முகத்தன்மை நமது மிகப்பெரிய பலமாகப் போற்றப்படும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவோம். உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதாகும். அதாவது, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட கொள்கைகளை நிலைநிறுத்துவது, இதன் மூலம் ஒவ்வொரு நபரும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ முடியும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது