விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்   நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலருடனான  ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பங்கேற்றார். இதில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் , மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளான விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், பயனாளிகள் விவரங்கள் குறித்தும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisment

2

பட்டாசு ஆலை விபத்துகளைத்  தடுப்பது மற்றும் அதற்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுவது, தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாகவும்  ஆய்வு  மேற்கொள்பட்டது. மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மகளிர் உதவித்தொகை, மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.

Advertisment

Untitled-1

ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். “அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம். அதில் சாலைப் பணிகள், குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தோம். திட்டப் பணிகளைப் பொறுத்தவரை 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளில் உள்ள குறைகளைக் களைந்து,  காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் உள் விளையாட்டு அரங்கங்களுக்கு முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் அனைத்துத்  திட்டப் பணிகளையும் ஆய்வு செய்ததில் திருப்திகரமாக உள்ளது.” என்றார்.