கடலூர் மாவட்டம் புவனகிரி  பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 15-ல் பழமை வாய்ந்த  இலுப்பை குளம் உள்ளது.  இந்த குளம் சுமார் 5 ஏக்கர் சுற்றளவு கொண்ட நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.  வீராணம் ஏரியிலிருந்து அரியகோஷ்டி வாய்க்கால் மூலம் குளத்திற்கு நீர் வருகிறது. ஒருமுறை குளம் முழு கொள்ளளவை அடைந்தால் ஒரு வருடத்திற்கு  குளத்தில் நீர் இருக்கும்.

Advertisment

இதனால் ஆதிவராகநத்தம், மேல்புவனகிரி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருக்கும். அதேபோல் ஆழ்துளை கிணறுகளில் பைப்புகள் மூலம்  எடுக்கப்படும் குடிநீர் உவர்ப்பு நீர் இல்லாமல் சுத்தமான குடிநீர் கிடைக்கும். கால்நடைகள் வைத்திருப்பவர்களும் இந்த குளத்தின் தண்ணீரைக் கொண்டு அதிக பயனடைந்து வருகின்றனர்.

இந்த குளத்தை தூர்வாரி நவீன முறையில் சீர்படுத்தி மேம்பாடு செய்வதற்காக ரூ 75 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் திட்டம் 2023-24-ல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ந் தேதி இணையதள வாயிலாக ஒப்பந்தம் கோரி ஆக 16-ந்தேதி  ஒப்பந்த பணிக்கான ஆணை ஒரு வருடத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் என வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் ஒப்பந்த ஆணை பெற்ற 10 நாட்களில் குளத்திற்கு தண்ணீர் வரும் அரியகோஷ்டி வாய்க்காலின்  கிளை வாய்க்காலில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை கொட்டி குளத்திற்கு தண்ணீர் வராமல் மூடிவிட்டனர். கடந்த 11 மாதமாக ஒப்பந்த நிறுவனம் குளத்தில் எந்த வேலையையும் செய்யாமல் இருந்தது.  இதனால் குளத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக  தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது.  

Advertisment

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க புவனகிரி ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியநாதன் கூறுகையில் தற்பொழுது பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு  கடந்த ஒருவாரத்திற்கு முன் குளத்தில்  2 அடி உயரம் 1.5 அடி அகலம் கொண்ட தள சுவர் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தளச்சுவர் போடப்பட்ட முதல் நாள் இரவு பெய்த மழையால்  தளச்சுவர் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு குளத்திற்கு அடித்து சென்றது. குளத்தின் தரைத்தளத்தை மட்டம் செய்யாமலும் தற்போது மழை காலத்தில் குளத்தில் அதிகம் தண்ணீர் தேங்கி நிற்கும் போது தூர் வாராமல் கண்துடைப்புக்காக வேலை செய்துவிட்டு அதிகாரிகளை வைத்துக் கொண்டு  மக்களின் வரிப்பணம் ரூ 75 லட்சத்தில் பாதிக்குமேல் வாரி சுருட்டுவதற்குண்டான வேலை செய்யப்பட்டு வருகிறது.

ஒப்பந்தம் எடுத்தவர் இந்த பணியை செய்யாமல் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடேசன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர் என்று பேரூராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளை செய்து ஊழியர்களை மிரட்டும் தோணியில்  ஈடுபடுவதாக ஊழியர்களே கூறுகிறார்கள்.

இந்த குளத்து பணியை ஒப்பந்த காலம் முடிந்த பிறகு தொடங்கியவர்கள் மழை நேரத்தில் அரைகுறையாக செய்துவிட்டு முழு பணத்தையும் எடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்கள்.எனவ பணியை தரமாகவும் முழுமையாகவும் முடிப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Advertisment

இதுகுறித்து புவனகிரி பேரூராட்சி (பொறுப்பு) செயல் அலுவலர் மயில்வாகனத்திடம் விவரம் கேட்டபோது 'ஒப்பந்த காலம் முடிந்த பிறகு பணி தொடங்கியது குறித்து தெரியாது. நான் பொறுப்பேற்று 10 நாள்தான் ஆகுது. நடைபெறும் பணியை மேல் அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு தான் வேலை செய்ததற்கு ஏற்றவாறு பணம் வழங்கப்படும். தரமான பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.