கரூரில் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் 7 வயது சிறுமியை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அந்த பகுதியில் போதையில் சுற்றிக் கொண்டிருந்த சரவணன் என்ற நபர் குழந்தையை கடத்தியதாக அந்த பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் மது குடிக்கும் பலர் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடையால் தான் இதுபோன்ற சம்பவங்கள் அடிகள் நடைபெறுகிறது என்று தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சிறுமியைக் கண்டுபிடித்து தருவதாகவும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதாகவும் உறுதி அளித்த பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற சரவணன் மீண்டும் அதே இடத்தில் சிறுமியை விட வந்தபோது சரவணனை போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment