குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலின் தலைமை அர்ச்சகராகப் பணிபுரிந்தவர் குமார் பட்டர். இவரது வீடு கோயிலுக்கு பின்புறம் உள்ள கீழ மலையான் தெருவில் அமைந்துள்ளது. கடந்த ஜூன் 16 ஆம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு குமார் பட்டர் உயிரிழந்தார். சடங்குகளை முடித்த பின்னர், ஜூலை முதல் வாரத்தில் அவரது மனைவி பிரியா, மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றனர்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிரியா தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் குலசேகரப்பட்டினத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 107 சவரன் தங்க நகைகள், வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பிரியாவின் புகாரின் பேரில், குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, கொள்ளைச் சம்பவம் நடந்த நாளிலும், அதற்கு முந்தைய சில நாட்களிலும், குலசேகரப்பட்டினம் கச்சேரி தெருவைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மொபைல் எண்ணின் இருப்பிடம் அந்த வீட்டருகே பதிவாகியிருந்தது.
இவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதால், காவல்துறையினர் அவரது நடமாட்டத்தையும், குடும்பத்தினரையும் ரகசியமாகக் கண்காணித்தனர். இதில், சின்னத்துரையின் தம்பி இசக்கிமுத்து புதிய மோட்டார் சைக்கிளில் சொகுசாகச் சுற்றியதைக் கவனித்த காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் சின்னத்துரையைப் பிடித்து, தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சின்னத்துரை, அவரது தம்பி இசக்கிமுத்து (23), தூத்துக்குடி மீளவிட்டானைச் சேர்ந்த மாரிமுத்து (26), மணப்பாடு பகுதியைச் சேர்ந்த மரிய யோசுவான் (25), குலசேகரப்பட்டினம் தியாகராஜபுரத்தைச் சேர்ந்த பட்டுத்துரை (30), சின்னமருது (19), குலசை மறக்குடியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (28) ஆகிய ஏழு பேர் இணைந்து குமார் பட்டரின் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 19 ஆம் தேதி இந்த ஏழு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சின்னத்துரை மற்றும் மாரிமுத்து, இருவரும் கொலை மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகளில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நெருங்கிய நண்பர்களாகி, பெரிய அளவில் கொள்ளையடித்து வாழ்க்கையில் செல்வந்தர்களாக வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தனர். ஜாமீனில் வெளிவந்த பிறகு, பல இடங்களை ஆய்வு செய்து, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலின் தலைமை அர்ச்சகர் குமார் பட்டர் இறந்த பின்னர் அவரது வீடு பூட்டிய நிலையில் இருப்பதை அறிந்து, அதில் பணமும் நகைகளும் இருக்கும் எனத் திட்டமிட்டனர்.
அதன்படி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி, சின்னத்துரையும் மாரிமுத்துவும் வீட்டின் பின்பக்கக் கதவு வழியாக உள்ளே நுழைந்து, பூஜை அறையில் இருந்த பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர். அப்போது, பீரோவை உடைக்க தேவையான கருவிகள் இல்லாததால், முழுமையாக திருப்தியடையாமல் வெளியேறினர். பின்னர், ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு, ஆகஸ்ட் 10 ஆம் தேதி, சின்னத்துரை, மாரிமுத்து, இசக்கிமுத்து, மரிய யோசுவான், பட்டுத்துரை, சின்னமருது, சண்முகசுந்தரம் ஆகிய ஏழு பேரும் மீண்டும் வீட்டிற்கு சென்று, பீரோவில் இருந்த 107 சவரன் தங்க நகைகள் மற்றும் வைரப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் வைரங்கள், மாரிமுத்துவின் மனைவி ராக்காயி மூலம் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டன. இதிலிருந்து 5 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்ற சின்னத்துரை, தனது கூட்டாளிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கினார். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பெரும்பாலும் கவரிங் நகைகள் இருந்ததாகவும், அவற்றை ஆற்றில் வீசிவிட்டதாகவும் தனது கூட்டாளிகளிடம் பொய் கூறி ஏமாற்றியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
வாக்குமூலத்தின் அடிப்படையில், நகைகளை அடகு வைத்த மாரிமுத்துவின் மனைவி ராக்காயியையும் காவல்துறையினர் கைது செய்து, தங்க நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைத் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே வீட்டில் இரு முறை கொள்ளையடித்து, கவரிங் நகைகள் என்று பொய் கூறி கூட்டாளிகளையும் காவல்துறையையும் ஏமாற்றிய இந்தச் சம்பவம், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி