ரெட் பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பீச் கிராஃப்ட் சி90 என்ற ரெட் பேர்ட் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து நேற்று (23.02.2026) டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தது. அதன்படி இந்த விமானம் சத்ரா மாவட்டம் சிமரியா அருகே உள்ள கசாரியா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் இரண்டு விமானிகள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, விமானம் புறப்பட்ட 20 - 25 நிமிடங்களுக்குள் விமானம் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு மற்றும் ரேடார் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் சத்ரா மாவட்டத்தின் கசாரியா பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விமானம் விழுந்து கிடந்தது எனக் கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து விசாரணை அமைப்புகள் ரெட் பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளன. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் சார்ட்டர் விமானங்கள், ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் பொதுவான விமானச் சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விபத்து குறித்து ரெட் பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் மொகிந்தர் கவுர் கூறுகையில், “இந்தச் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம். விமானம் சரியாகத்தான் இயங்கியது. இங்கிருந்து திரும்பும் போதும் அதில் எந்தக் கோளாறும் இல்லை. இரண்டு விமானிகளும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை அமைப்புகள் வந்து சில ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/24/jh-flight-ins-2026-02-24-15-42-34.jpg)