கர்நாடகா மாநிலம், பெங்களூருவின் சித்தாபுரா பகுதி அருகே உள்ள சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் கிளை ஒன்று உள்ளது. இந்நிலையில், இந்த ஏடிஎம்மில் பணத்தை நிரப்புவதற்காக ஜே.பி. நகரில் உள்ள தனியார் வங்கியிலிருந்து சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் எனும் நிறுவனத்தைச் சேர்ந்த வாகனம் 7.11 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. இந்த வாகனத்தில் ஓட்டுநர் வினோட் குமார், கேஷ் லோடிங் ஸ்டாஃப் மற்றும் 2 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் இருந்துள்ளனர்.

Advertisment

அப்போது பணம் ஏற்றிக்கொண்டு சென்ற வண்டியைத் திடீரென ‘கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா’ என்று ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று வழிமறித்துள்ளது. அந்தக் காரில் இருந்து டிப்டாப்பாக இறங்கிய மர்ம நபர்கள், தங்களை இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டுள்ளனர். மேலும்,  “இவ்வளவு பணத்தை எடுத்துச் செல்கிறீர்கள்... அதன் ஆவணத்தைச் சரிபார்க்க வேண்டும்” என்று கேஷ் லோடிங் ஸ்டாஃபிடம் கேட்டுள்ளனர். பின்னர், அடுத்த நொடியே துப்பாக்கி முனையில் பணம் ஏற்றி வந்த வாகனத்துடன் சேர்த்து அதில் இருந்த நால்வரையும் அந்தக் கும்பல் கடத்தியிருக்கிறது.

Advertisment

டேரி சர்க்கிள் மேம்பாலம் வரை வாகனத்தை ஓட்டிச் சென்ற அந்தக் கொள்ளைக் கும்பல், மதியம் 1.15 மணிக்கு மேம்பாலத்தில் ஓரமாக வண்டியை நிறுத்தியுள்ளனர். பின்னர், காரில் இருந்த 7.11 கோடி ரூபாய் பணத்தை சி.எம்.எஸ் வாகனத்தில் இருந்து தங்களது காருக்கு மாற்றியுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த இரு துப்பாக்கிகளைப் பிடுங்கிக்கொண்ட அந்த மர்மக் கும்பல் வாகனத்தையும், அதில் இருந்த நால்வரையும் மேம்பாலத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கிறது. இந்தக் கொள்ளைச் சம்பவம் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் நடந்து முடிந்திருக்கிறது. போகும் போது அந்தக் கும்பல் சி.எம்.எஸ் பாதுகாவலர்களிடம் இருந்து பிடுங்கிய இரு துப்பாக்கிகளையும் சாலையோரம் வீசிவிட்டுச் சென்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, சி.எம்.எஸ் வாகனத்தின் ஓட்டுநர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், உடனடியாக விரைந்து வந்த போலீசார் டேரி மேம்பாலத்தைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சி.எம்.எஸ் வாகனத்தில் இருந்த இரு பாதுகாவலர்களிடமும் துப்பாக்கிகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் அதனைப் பயன்படுத்தாமல் கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் சென்றிருக்கின்றனர். அதேசமயம், வாகனத்தின் ஓட்டுநர் உடனடியாகத் தகவலைத் தெரிவிக்காமல் சம்பவம் நடந்த ஒரு மணி நேரம் கழித்தே இந்தத் தகவலை போலீசாருக்கு கூறியிருக்கிறார். இது காவல்துறையினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

இதையடுத்து, சி.எம்.எஸ் வாகனத்தில் இருந்த நால்வரையும் விசாரணை வளைத்திற்குள் கொண்டு வந்துள்ள போலீசார், கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனங்களைக் குறிவைத்து, பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு நகரம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ள நிலையில், கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தைத் தடுத்து 7 கோடி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.