அரசு தொடக்கப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தானதில் 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தின் மனோகர் தானேவில் பிப்லோடி அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை கல்வி வழங்கப்படுகிறது. இந்த பள்ளிக்கு வழக்கம்போல் இன்று காலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் வரத் தொடங்கினர். ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் சுமார் 40 குழந்தைகள் பள்ளி வளாகத்தில் இருந்த போது திடீரென பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், ஆசிரியர்களும் மாணவர்களும் இடிபாடுகளில் சிக்கினர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடக்கப்பள்ளியில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க ஒரு பெரிய மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது, போலீசார், உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உட்பட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பேரிடர் நிவாரணக் குழுக்களும் மீட்புப் பணிகளுக்காக சம்பவ இடத்தில் குவிந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து அறிந்ததும் பள்ளிக் குழந்தைகளின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இடிபாடுகளை அகற்ற உதவுவதற்காக நான்கு ஜேசிபி இயந்திரங்களும் சம்பவ இடத்திற்கு வந்து அகற்றியது. மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தானதில் 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மனோகர் தானா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளிக் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. இது தொடர்பாக பல புகார்களும் எழுந்தபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அம்மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர் கூறியதாவது, ‘சரியான ஏற்பாடுகளைச் செய்யவும், காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு எந்த விதமான சிரமங்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறியவும் உத்தரவிட்டுள்ளேன்ன். ஆட்சியரிடம் பேசி, நிலைமையை ஆராய்ந்து, முடிந்தவரை உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என கூறினார்.