ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, ஏலம் விடப்பட்டு அத்தொகையை மாதந்தோறும் வசூலித்து வருகிறது. இதில், ஏலம் எடுத்தவர்கள் சிலர் வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்து வந்தனர். வாடகை பாக்கி வைத்துள்ளவர்களிடம் முறையாக வசூலிக்க மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டார். இதன்பேரில், வாடகை நிலுவை வைத்துள்ளவர்களுக்கு மாநகராட்சி வருவாய் பிரிவினர் வாடகை தொகையை செலுத்த கோரி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

இந்நிலையில், வாடகை செலுத்தாமல் 6 மாதமாக நிலுவை வைத்திருந்ததாக ஈரோடு மணிக்கூண்டு அருகே செயல்படும் நேதாஜி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த 6 கடைகளுக்கு இன்று மாநகராட்சி வருவாய் பிரிவு உதவி ஆணையர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- ஈரோடு நேதாஜி வணிக வளாகத்தில் 12 கடைகள் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்திருந்தனர். வாடகை பாக்கி தொகையை செலுத்தக்கோரி வழங்கப்பட்ட எச்சரிக்கை நோட்டீசால் 6 கடைக்காரர்கள் வாடகையை செலுத்தி விட்டனர். தொடர்ந்து 6 மாதத்திற்கு மேல் ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருந்த 6 கடைகளை பூட்டி சீல் வைக்க ஆணையரின் உத்தரவின்பேரில், இன்று 6 கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளோம். வாடகை தொகையை அபராதத்துடன் செலுத்தினால் மீண்டும் கடை நடத்திட அனுமதி அளிக்கப்படும். இதேபோல், மாநகராட்சிக்கு சொந்தமான கனிமார்க்கெட்டிலும் சில கடை உரிமையாளர்கள் 3 மாதத்திற்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ளனர். அந்த கடைகளும் வருகிற வாரத்தில் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.